Breaking News

லசந்த கொலை செய்யப்பட்டு, 8 வருடங்கள் நிறைவு



சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு, இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும் இதுவரை அந்த கொலைக்கான நீதி எட்டப்படாமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

லசந்தவின் படுகொலையை நினைவுகூரும் வகையில் இன்றைய தினம் பொரள்ளையிலுள்ள அவரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்வுகளில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், முன்னாள் சக ஊழியர்கள், அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் உள்ளவர்களும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

ஸ்ரீலங்காவின் முன்னணி ஊடகவியலாளர்களில் ஒருவராக திகழ்ந்த லசந்த விக்ரமதுங்க, முன்னாள் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த ஒருவராக பலராலும் அறியப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி, வீட்டில் இருந்து தொழிலுக்கு செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு, தப்பிச் சென்றிருந்தனர்.

லசந்த விக்ரமதுங்கவை, மஹிந்த ராஜபக்ச அரசாங்கமே கொலை செய்ததாக பரந்தளவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், அதனை அந்த அரசாங்கம் நிராகரித்திருந்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், ஊடக சுதந்திரம் தொடர்பில் மறுசீரமைப்பை மேற்கொள்வதாக உறுதி அளித்ததுடன், விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

ஏழு வருடங்களின் பின்னர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கடந்த ஜுலை மாதம் இராணுவ புலனாய்வு அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.