Breaking News

எழுக தமிழோடு இணைந்துகொண்டார் வியாழேந்திரன்(காணொளி)

இந்தச் சந்திப்பில் பேரவையின் இணைத் தலைவர்
கருத்துக் கூறுகையில், கடந்த முறை ஊடக சந்திப்புக்களை தவிர்த்து வந்த நிலையில் இன்றைய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமையை வரவேற்கின்றோம்.

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறயிருக்கும் எழுக தமிழ் நிகழ்வுக்கு தமிழ் மக்கள் பேரவையோடு கலந்து கொண்டு செயற்பட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் முன் வந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. நடைபெற இருக்கும் எழுக தமிழ் நிகழ்வுக்கு அரசியல் பிரமுகர்கள் உட்பட ஆதரவாளர்களின் விழிப்புணர்வு திறன்பட நடைபெற்று வருகின்றது. இலங்கைய தொடர்பில் ஐ.நா. எடுத்த தீர்மானங்களில் சிறிதளவே நடைபெற்றுள்ளது.

அதிகமான தீர்மானங்களை நிறைவேற்றாமல் இருப்பதானது மக்களையும் சிவில் அமைப்புக்களையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றது எனத் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உரையாற்றுகையில், 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை முன்வைத்தே வாக்கு கேட்டது. அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்றே நாங்கள் கேட்கின்றோம்.அதனையே தமிழ் மக்கள் பேரவையும் கோருகின்றது. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு இந்தப் பொங்கல் நாள் மகிழ்ச்சியான பொங்கல் நாள் என்று கூற முடியாது. பல்வேறு போராட்டங்களை நடாத்தும் ஆண்டாகவே மாறி வருகின்றது.

கடந்த ஆண்டு ஒரு விமோசனம் கிட்டும் என நினைத்தனர். இந்த ஆண்டாவது விமோசனம் கிட்டும் என்று கருதினர். ஆனால் அனைத்து வழிகளிலும் ஏமாற்றமே காணப்படுகின்றது. காணாமல்ஆக்கப்பட்டவர்களிள் போராட்டம். மாணவர்கள் தொடக்கம் தமது காணிகளை விடுவிக்க கோரி வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.

சிறையில் உள்ள தமது பிள்ளைகளை விடுவிக்குமாறும் கணவன்மாரை விடுவிக்குமாறும் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையிலேயே இந்தப் புத்தாண்டு மலர்ந்துள்ளது.

இந்த நாட்டில் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் தமிழ் மக்களுக்கான எந்தவித தீர்வினையும் வழங்காத நிலையில் இருந்த அரசினை சிறுபான்மை சமூகம் 2015 ஆம் ஆண்டு மாற்றியமைத்தது. பல எதிர்பார்ப்புகளுடனேயே இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகி மூன்றாவது வருடம் ஆரம்பித்துள்ளது. ஆனால் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை.

கால இழுத்தடிப்புக்கூடாக இழுத்துச் செல்லப்படுகின்றதே தவிர நிறைவேற்றப்படவில்லை. தமிழ் மக்களுக்கான நீதியான தீர்வினைக் கேட்டு தமிழ் மக்கள் பேரவை ஊடாக வடகிழக்கில் எழுக தமிழ் நிகழ்வு நடாத்தப்படுகின்றது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் இந்த எழுக தமிழ் நிகழ்வு நடாத்தப்படும். இதில் உண்மையில் உணர்வுள்ள அனைத்து தமிழ் பற்றாளர்களும் தமிழ் பேசும் உறவுகளும் பங்கு கொள்ள வேண்டும்.

தமிழ் தலைமைகள் வரலாற்று ரீதியாக இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக குரல் கொடுத்து வந்துள்ளனர். தமிழரசுக் கட்சி கூட மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட போது தோற்றம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. எழுக தமிழ் என்பது தமிழ் பேசும் சமூகம் சார்ந்த உரிமைக்கான குரலாக இருக்கும்.



வடமாகாணம் கூட அரசியல் தீர்வு ஒன்றை முன்மொழிந்துள்ளது. இதனையே நாங்கள் நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றோம். தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலர் நாங்கள் உணர்ச்சியூட்டுவதாக தெரிவிக்கின்றனர். தமிழர்களின் அரசியல் வரலாற்றில் பல தலைவர்கள் உணர்ச்சிகளை ஊட்டியதன் காரணமாக தமது மக்களின் உரிமைக்காக ஆயுதம் தூக்கிப் போராடினார்கள்.

அந்த போராடிய இளைஞர்களை காலப் போக்கி துரோகிகளாக பார்க்கும் நிலையும் வரலாம். நாங்கள் இளைஞர்களை உணர்ச்சி ஊட்டவில்லை. எழுக தமிழ் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முரண்பட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் புளோட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். என்பன இதற்கு ஆதரவு வழங்கி வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வுக்கு தமிழரசுக் கட்சி மற்றும் டெலோ கட்சி கிழக்கில் ஆதரவு வழங்கவுள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு இணைப்பு என்பதில் நாங்கள் என்றும் உறுதியாகவுள்ளோம். அதற்காகவே தமிழ் மக்கள் இந்த நாட்டில் அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் போராட்டங்களை நடாத்தினர்.

இது தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களாக இருக்கலாம் முஸ்லிம் பிரதிநிதிகளைக் கொண்ட சிவில் அமைப்புகளாக இருக்கலாம். தமிழ் மக்கள் பேரினவாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள். அதன் வலியை உணர்ந்தவர்கள் வடகிழக்கு இணைக்கப்படும் போது எமக்கு அடுத்ததாகவுள்ள முஸ்லிம் மக்களுக்கும் எந்த அநீதியையும் நாங்கள் ஏற்படுத்தமாட்டோம்.

அதனை முஸ்லிம் மக்களும் அரசியல் தலைமைத்துவங்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். இதில் எந்த குழப்பமும் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

வடகிழக்கு இணைக்கப்படும் போது முஸ்லிம் மக்களின் நியாயமான அவர்களுக்குரியதை நாங்கள் தாராளமாக விட்டுக்கொடுப்பதற்கு தயாராகவுள்ளோம் எனத் தெரிவித்தார்.

21ஆம் திகதி மட்டக்களப்பில் 'எழுக தமிழ்' நிகழ்வு : சி.வி. கலந்துகொள்வார் என தகவல்

கிழக்கு எழுக தமிழ் மட்டக்களப்பு மாநகர சபையின் பாட்டாளி புரம் மைதானத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் இதில் வட மாகாண முதலமைச்சர் ஓய்வு பெற்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வார் என்றும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா தெரிவித்தார்.

எழுக தமிழ் நிகழ்வுகள் 21ஆம் திகதி காலை கல்லடி மற்றும் ஊறணி ஆகிய இடங்களில் இருந்து வரும் பேரணியுடன் ஆரம்பமாகி பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்வுடன் நிறைவடையும். தைப்பொங்கல் தினமான இன்று மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியிலுள்ள கூட்டுறவுக்கட்டத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வசந்தராஜா,

இன்றைய தினம் இன்றைய தினத்திலே மட்டக்களப்பின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு எம்மோடு இணைந்து செயற்பட முன்வந்திருப்பதானது எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது.

தமிழ் மக்கள் பேரவையோடு இணைந்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்கள் உள்ளடங்களாக தொண்டர்களும் மற்றும் தனி நபர்களும் மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கான அணிதிரட்டலை மிகவும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

2015 ஐ.நா. இன் மனித உரிமைகள் பேரவை இலங்கை நாட்டின் சம்மதத்தோடு இனங்களுக்கிடையே நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் பற்றிய விடயங்களில் குறிப்பிட்ட காலத்தினுள் முன்னேற்றங்களைக் காட்டுதல் வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

இத்தீர்மானத்தில் உள்ள விடயங்களில் மிகச் சிறிதளவே இது வரையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. மிக அதிகளவான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படாமலும் நிறைவேற்ற முயற்சிக்கப்படாமலும் இருப்பது மக்களையும் சிவில் அமைப்புக்களையும் ஏமாற்றத்திற்கு உட்படுத்தியுள்ளது.

வருகின்ற பங்குனி மாதம் ஐ.நா. இன் மனித உரிமைகள் பேரவையின் 34 வது கூட்டத் தொடர் கூடி இலங்கையினால் சம்மதம் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவிருக்கின்றது.

அக்கலந்துரையாடலின் போது இலங்கை மேலும் கால அவகாசம் கோரலாம், அல்லது சக்தி வாய்ந்த நாடுகளின் துணையோடு மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை நீர்த்துப் போக செய்ய முயலலாம் என்ற ஓரு சந்தேகம்; மக்களிடையே ஏற்பட்டுள்ளது

இத்தகைய தருணத்தில் பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த சிறுபான்மை மக்கள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை துரிதப்படுத்துமாறு அரசையும் சர்வதேசத்தையும் கேட்பதோடு சிறுபான்மை இனங்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை நாட்டுக்கும் உலகத்துக்கும் அழுத்திச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு மக்கள் ஏற்கனவே கடந்த புரட்டாதி 24 அன்றைய ‘எழுக தமிழ்’ நிகழ்வினூடாக தங்கள் அரசியல் அபிலாசைகளை நாட்டுக்கும் உலகத்துக்கும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்து விட்டார்கள்.

தமிழ் மக்கள் பேரவை கிழக்கு மக்களுக்கான சந்தர்ப்பத்தை எதிர் வரும் தை 21 இல் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஆயத்தங்களை செய்து வருகின்றது

எனவே அன்றைய நாளை ஒரு முக்கிய நாளாகக் கருதுமாறு தமிழ் மக்கள் பேரவவை கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது

அன்றைய நாளில் தனியார் நிறுனங்கள், வர்த்தக நிலையங்கள், கல்விச் சாலைகள் அனைத்தையும் மூடி இந்நிழ்வில் பங்கு பெறுமாறும்,

உயர் கல்வி றிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்கள், மாணவர் சங்கங்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும்,

முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் தனியார் வாகனச் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தங்களது வண்டிகளோடு ‘எழுக தமிழ்’ பேரணியில் கலந்து கொள்ளுமாறும்,

விளையாட்டுக் கழகங்கள், இழைஞர் கழகங்கள், சமூதாய மட்ட அமைப்புக்கள், விவசாய சங்கங்கள், மீன்பிடிச் சங்கங்கள், கமநல அமைப்புக்கள், ஆலய பரிபாலன சபைகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், மாற்றுத் திறனாளிகள் அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமய ஸ்தாபனங்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தகர் சம்மேளனங்கள் முதலான சகல அமைப்புக்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் தமிழ் மக்கள் பேரவையின் கிழக்கின் ‘எழுக தமிழ்’ ஏற்பாட்டுக்குழு இவ்வூடக அறிக்கையினூடாக அழைப்பு விடுகின்றது.

அதே நேரம் இவ்வமைப்புக்கள் எழுக தமிழுக்கான ஆதரவினைத் தெரிவித்து ஊடக அறிக்கைகளை விடுக்குமாறும் எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு சகல அமைப்புக்களையும் கோருகின்றது

அன்றைய பேரணியில் கலந்து கொள்ளும் மக்களின் தாகசாந்திக்கு தண்ணீர்ப் போத்தல்களையும் குடிபானங்களையும் வழங்கி உதவுமாறு விருப்புள்ளோரையும் வசதி உள்ளோரையும் ஏற்பாட்டுக்குழு கோருகின்றது

மேலும் கிழக்கிலே மக்களுக்காக அவர்களின் அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக் கொடுக்க பணியாற்றிக் கொண்டிருக்கின்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், கௌரவ மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்களினால் தமிழ் மக்கள் பேரவையினூடாக நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் முன் வைக்கும் தங்களது ஜனனாயக ரீதியிலான கோரிக்கைகளுக்கு பலம் சேர்க்குமாறு எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு விஷேட அழைப்பு விடுக்கின்றது என்று எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு சார்பாகத் தெரிவித்தார்.

முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்