வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை! – அரசாங்கம்
யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான விடயங்களுக்கு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை பொறிமுறை ஏற்படுத்தப்பட்டு நீதி வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளிட்ட பலர் அரசை வலியுறுத்தி வரும் நிலையில், குறித்த விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளதென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க பொறிமுறை குறித்து மக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டதோடு, அதில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து, நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே மேற்குறித்தவாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
”போர்க்குற்ற விசாரணை தொடர்பில் யார் பரிந்துரைகளை முன்வைத்தாலும் உள்ளக பொறிமுறையில் வெளிநாட்டு பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. உள்நாட்டு நீதிபதிகள் மாத்திரமே விசாரணைகளில் உள்ளடக்கப்படுவர். தொழிநுட்ப ரீதியான ஆலோசனைகள் மட்டுமே சர்வதேசத்திடம் பெறப்படும்.
நல்லிணக்க செயலணியின் அறிக்கை போன்று பல அறிக்கைகள் எம்மிடம் உள்ளன. இவற்றை பரிசீலிக்க தயாராக இருந்தாலும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. குறித்த பரிந்துரைகளில் காணப்படும் விடயங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சரவையே தீர்மானிக்கும். விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் என்ற எமது நிலைப்பாட்டை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். அதனை அவரும் ஏற்றுக்கொண்டார்” என்றார்.