வெளிநாட்டு நீதிபதிகளுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க முடியாது - நீதி அமைச்சர்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறை களுக்கான கலந்தாய்வு செயலணி மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்கும் ஒவ்வொரு நீதிமன்றங்களிலும், குறைந்தது ஒரு அனைத்துலக நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்று நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நீதித்துறை சுதாந்திரத்தைப் பற்றிய யாரும் முறையிடவில்லை. நல்லிணக்க மற்றும் அமைதிக்கான செயல்முறை தான் எமக்குத் தேவை. இந்தச் சூழலில் இந்த அறிக்கை தேவையற்றது.
எனவே கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டியதில்லை.
அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்குமாறு யாரும் எம்மை அழுத்தம் கொடுக்க முடியாது. அவ்வாறான அழுத்தங்கள் தொடர்ந்தால், விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்பதற்கு சிங்கள, முஸ்லிம் மக்கள் தள்ளப்படுவார்கள்.
தலதா மாளிகை, சிறிமாபோதி, அரந்தலாவ, காத்தான்குடி போன்ற தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அவர்களும் கோருவார்கள்.
வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க முடியாது. அது, உறுப்பு நாடுகளைப் பலவந்தப்படுத்தல் மற்றும் அழுத்தம் கொடுத்தல் தொடர்பான ஐ.நா பிரகடனத்துக்கு எதிரானது.
வெளிநாட்டு நீதிபதிகளை உள்நாட்டு நீதிமன்றங்களில் நியமிப்பது அரசியலமைப்பு மீறலாகும்.
முன்னாள் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கையெழுத்திட்ட உடன்பாட்டினால் தான் இந்த சூழல் ஏற்பட்டது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.