நல்லிணக்க பொறிமுறை குறித்த செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தற்கென மக்களின் கருத்துக்களை கேட்டறிய அமைக்கப்பட்ட செயலணியின் இறுதி அறிக்கை இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டவுள்ளது.
கடந்த ஆண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெறப்பட்ட மக்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு நல்லிணக்க பொறிமுறை தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் மக்கள் கருத்தறியும் குழு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டது.
கலாநிதி மனோரி முத்தேட்டுகம தலைமையிலான குறித்த குழுவினர் நாடு முழுவதும் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட அமர்வுகளில் வழங்கப்பட்ட மக்கள் கருத்துக்களைத் தொகுத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச விசாரணையே தேவை என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறிக்கை இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் கையளிக்கப்படவுள்ளதாக நல்லிணக்கப் பொறிமுறை குறித்த செயலணியின் பொதுச் செயலாளரும் மக்கள் கருத்தறியும் குழுவின் பணிப்பாளருமான பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை நினைவில்கொள்ளத்தக்கது.
உண்மை மற்றும் நீதியைக் கண்டறிதல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல், அதற்கான இழப்பீடுகளை பெறுவதற்கு வழிவகைசெய்தல் போன்ற இலங்கையின் நல்லிணக்கப் பொறிமுறைகள் மற்றும் வழிவகைககள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக நல்லிணக்கப்பொறிமுறைகள் குறித்த கலந்தாலோசனைச் செயலணி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நோக்கங்களை அடைவதற்காக 1) காணமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் 2) உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள நிகழாமைக்கான ஆணைக்குழு 3) விசேட நீதிமன்றத்தை உள்ளடக்கிய நீதிமன்ற பொறிமுறை 4) இழப்பீட்டிற்கான அலுவலகம் ஆகியவற்றை அமைக்க உத்தேசித்துள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.