Breaking News

காணாமற்போனோர் பணியக சட்டம் – முட்டுக்கட்டை போட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு



சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் பணியகம் தொடர்பான சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து கரிசனை வெளியிட்டு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.

காணாமற்போனோர் பிரச்சினைகளைக் கையாளுவதற்காக, காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்குவதற்கான சட்டம் ஒன்று கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அந்தச் சட்டத்தில் திருத்தங்களை முன்வைக்கவிருப்பதாக ஜேவிபி கூறியதையடுத்து, சிறிலங்கா அரசாங்கம் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடித்து வருகிறது.

இந்த நிலையில், காணாமற்போனோர் பணியகம் விரைவில் உருவாக்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார்.

ஜேவிபி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் திருத்தங்களை முன்வைத்த பின்னர் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இந்த சட்டம் தொடர்பாக கரிசனை வெளியிட்டு, சிறிலங்கா அதிபருக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

இதனை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

காணாமற்போனோர் பணியக சட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர் நிராகரித்துள்ளார்.

எனினும், இராணுவ நிலைகளுக்குள் நுழைந்து தேடுதல் நடத்த அனுமதித்தல் உள்ளிட்ட, இந்தச் சட்டத்தின் சில பிரிவுகள் தொடர்பாக,கரிசனை வெளியிட்டு, சிறிலங்கா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.