பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை குணப்படுத்த வேண்டியது முக்கியம் – அல் ஹுசேன்
போரினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை சிறிலங்கா குணப்படுத்த வேண்டியது முக்கியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார்.
டாவோசில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டின் பக்க நிகழ்வாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட்அல் ஹுசேனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், “மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்காவில் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எல்லா சமூகங்களின் உரிமைகளையும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான செயல்முறைகளை சிறிலங்காவினால் மேற்கொள்ள முடியும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை நம்புகிறது.
போரினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை சிறிலங்கா குணப்படுத்த வேண்டியது முக்கியம்” என்று குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட சிறிலங்கா பிரதமர், எல்லா சமூகங்களின் உரிமைகளையும் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்துள்ளார்.