Breaking News

பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டத்தை ஆராய அங்கிகாரம்

பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்குத் தயாரிக்கப்பட்டுள்ள ‘கொள்கைகள் மற்றும் சட்டக் கட்டமைப்பினை’, தேசிய பாதுகாப்புத் தொடர்பான நாடாளுமன்ற மேற்பார்வை செயற்குழுவுக்கு ஆற்றுப்படுத்தி, சிபார்சுகளை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது. 

 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரம் கிடைத்துள்ளது. அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. 

 பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் தாக்குதல்களிலிருந்து இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் அங்கு வாழ்கின்ற மக்களைப் பாதுகாத்தல், இலங்கையின் ஐக்கியம், ஒருமைப்பாடு மற்றும் சுயாதீனத்தை பாதுகாக்கவும், வெளிநாடுகளில் இடம்பெறும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இலங்கையை அல்லது அதன் மக்களை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்குமே பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டம் தயாரிக்கப்படவிருக்கின்றது. 

பயங்கரவாத செயற்பாடுகளை இனங்காணல், அதில் ஈடுபடுபவர்களை கைதுசெய்தல், தடுத்துவைத்தல், விசாரணைகளை முன்னெடுத்தல், வழக்குத்தாக்கல் செய்தல் மற்றும் தண்டனை கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே இச்சட்டம் தயாரிக்கப்படவுள்ளது. அதனடிப்படையில், அச்சட்டக் கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டு, பொருத்தமான சட்ட வரைபொன்று தயாரிக்கப்படும் என்றும் அந்தப் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.