அம்பாந்தோட்டையில் பேரணிகளுக்குத் தடை
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், அம்பாந்தோட்டையில் பேரணிகள், கூட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கும், 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை கைத்தொழில் வலயத்தை அமைப்பதற்காக சீனாவுக்கு வழங்குவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு கூட்டு எதிரணி, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், 15 ஆயிரம் ஏக்கர் காணிகளையும் சீனாவுக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிராக நேற்று ஜேவிபி அம்பலாந்தோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியிருந்தது.
ருகுணு அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் அம்பாந்தோட்டை, துறைமுக மற்றும் கைத்தொழில் வலயத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் தொடர்பான ஆரம்ப நிகழ்வு இன்று அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.
இதில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சீனத் தூதுவர் மற்றும் சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிலையில், அம்பாந்தோட்டையில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்படலாம் என்பதால், தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறிலங்கா காவல்துறை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாகவே, அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் மூலம் நேற்று, அம்பாந்தோட்டைப் பகுதியில் எந்த எதிர்ப்புப் பேரணியும் நடத்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்தி குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு எதிரணியினர் திட்டமிட்டிருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு தகவல் கிடைத்திருப்பதாக, அமைச்சர் மகிந்த அமரவீர இரண்டு நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
இரத்தக் களரியை ஏற்படுத்தி அரசாங்கத்துக்கு அவப்பழியை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையிலேயே, அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது