நுகேகொடையில் 27ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிரான பேரணி
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான வேலைத்திட்டங்களை விரிவுபடுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. அவ்வேலைத்திட்டத்தின் முதலாவது பேரணி எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெறவுள்ளது என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் அப்பேரணியில் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இவ்வருடம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு மிகவும் தீர்க்கமான ஆண்டாக அமையவுள்ளது. ஏனெனில் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தவறியுள்ளது. அதனால் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்துள்ளனர். எனவே கூட்டு எதிர்க்கட்சியானது அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களை இணைத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. அதற்கிணங்க ஐந்து பிரதான காரணங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.
நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றமை, அரச நிறுவனங்களை விற்பனை செய்கின்றமை, ஊழல் மோசடி என்பனவே அவையாகும்.
எனவே எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் ஆரம்பமாகவுள்ள எதிர்ப்பு பேரணியைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஏனைய மாவட்டங்களிலும் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். ஆகவே நாட்டைப் பாதுகாக்க நினைக்கும் சகலரும் எம்முடன் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.