கலப்பு விசாரணைக்கு பரிந்துரைத்தது ஏன்?- கலந்தாய்வு செயலணி விளக்கம்
பாதிக்கப்பட்ட மக்கள் உள்நாட்டு விசாரணை மீது நம்பிக்கை கொள்ளாததாலும், போர்க்குற்றச்சா ட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நிபுணத்துவம் உள்நாட்டில் இல்லை என்பதாலுமே, கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி தெரிவித்துள்ளது.
மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் கொண்ட நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்திடம் கடந்த 3ஆம் நாள் கையளிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடத்தப்பட்டது.
இந்த செய்தியாளர் சந்திப்பில், செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம, செயலர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பேராசிரியர் சித்திரலேகா மெளனகுரு, கலாநிதி கமீலா சமரசிங்க, கலாநிதி பர்ஸானா ஹனீபா, மீராக் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பிலேயே, பாதிக்கப்பட்ட மக்கள் உள்நாட்டு விசாரணை மீது நம்பிக்கை கொள்ளாததாலும், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நிபுணத்துவம் உள்நாட்டில் இல்லை என்பதாலுமே, கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக செயலணியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரமன்றி தெற்கில் பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கூட, தடயவியல் விசாரணை போன்றவற்றில் அனைத்துலக நிபுணர்கள் அல்லது விசாரணையாளர்கள் இடம்பெறுவதை விரும்புவதாகவும் செயலணி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.