CID என தம்மை அடையாளப்படுத்தியவர்களால் முல்லைத்தீவில் துணிகர திருட்டு!
முல்லைத்தீவு நகர் செல்வபுரம் பகுதியில் நேற்று இரவு 11.15 மணியளவில் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற நான்குபேர் கொண்ட குழுவினரால் 60000 ஆயிரம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நேற்று நள்ளிரவு வீட்டு நபருடைய பெயரைச்சொல்லி கூப்பிட்டபடி தாம் CID யினர் எனவும் விடுதலைப்புலிகளின் பணம் தொடர்பில் தங்களிடம் விசாரிக்க வேண்டும் என்று நான்குபேரை கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.
அவர்களில் இருவர் வெளியில் நிற்கவே இருவர் வீட்டிற்குள் நுழைந்து "விடுதலைப்புலிகளின் பணத்தை பயன்படுத்தியே உங்களின் மகனை வெளிநாடு அனுப்பியுள்ளீர்கள்" என்று மிரட்டியுள்ளனர்.அதற்க்கு வீட்டு உரிமையாளர் தான் வாங்கி ஒன்றில் கடன்பெற்ற ஆவணங்களைக் காட்டியுள்ளார்.ஆவணங்களை பார்வையிட்ட சந்தேக நபர்கள் வீட்டை சோதனையிடவேண்டும் என்றுகூறி வீட்டிலிருந்தவர்களை வீட்டின்நடுவே அமர்த்திவிட்டு வீட்டை சல்லடை போட்டுள்ளனர்.
அதன்பின்பு வீட்டு உரிமையாளரின் அடையாள அட்டையினை வாங்கி கொண்டு "நாளை மறுநாள் மீண்டும் விசாரணைக்கு வருவோம்" என்று கூறி சென்றுள்ளார்கள்.குறித்த நபர்கள் மீது சந்தேகம் கொண்ட வீட்டின் உரிமையாளர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நள்ளிரவே முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார் நள்ளிரவு இரண்டுமணியளவில் குறித்த வீட்டிற்கு சென்றுள்ளார்கள்.இதன்போது வீட்டில் பணம் ஏதாவது இருந்ததா என பொலிஸார் வீட்டு உரிமையாளரைக்கேட்கவே பணமிருந்த இடத்தை வீட்டு உரிமையாளர் பார்த்துள்ளார்.அப்போது அந்த வீட்டில் இருந்த 60000 ஆயிரம் ரூபா காணாமல் போயுள்ளமை தெரியவந்தது.
இதேவேளை வீட்டு உரிமையாளரின் அடையாள அட்டை வீட்டுக்கு வெளியே வீசிக்காணப்பட்டதுடன் வீட்டிற்குள் வந்த இரு சந்தேக நபர்களில் ஒருவர் தமிழில் சரளமாக பேசியதாகவும் மற்றவர் சிங்களத்திலும் கொச்சைத்தமிழிலும் கதைத்தாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
இதேவேளை மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.