ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ய பிள்ளையானே உத்தரவிட்டார் – சட்டமா அதிபர்
கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் உத்தரவின் பேரிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காவல்துறையின் விசாரணைகளில் இது தெரியவந்திருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நேற்று முன்தினம் உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஒரு ஆண்டுக்கு மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், தனது தடுப்புக்காவலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு அவர் உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ய, சாந்தன் என்பவருக்கு பிள்ளையானே உத்தரவிட்டார் என்று காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்திருப்பதாகவும், அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
பிள்ளையான் தரப்பில் முன்னிலையான சட்டவாளர் இதனை நிராகரித்ததுடன், இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த சாட்சியமும் இல்லை என்றும் வாதிட்டார்.
இதனை அடுத்து இந்த வழக்கை மே 30ஆம் நாளுக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.