வடக்கில் 136 இந்திய மீனவர்கள் கைது
2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 136 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன், தெரிவித்தார்.
“கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து டிசெம்பர் மாதம் வரையான 12 மாதங்களில், நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது இவர்கள், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்” என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
“அவற்றில் 97 மீனவர்கள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதியில் டிசெம்பர் 22ஆம் திகதி வரை 7 படகுடன் வெவ்வேறு தினங்களில் கைதான 39 மீனவர்கள் தொடர்ந்தும் நீதிமன்ற உத்தரவுக்கு அமையத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்றார். மேலும், 28 விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் ஜனவரி மாதம் படகுகளுடன் 16 மீனவர்களும், மார்ச் மாதம் 5 படகுடன் 20 மீனவர்களுமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மாதம் 2 படகுடன் நெடுந்தீவில் கடலில் 13 மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட அதேவேளை, மே மாதம் எந்தவொரு மீனவர்களும் கைதுசெய்யப்படவில்லை. அதேபோல் ஜீன் மாதம் 4 விசைப்படகுடன் பருத்தித்துறை, நெடுந்தீவு கடலில் 16 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜீலை மாதம் 2 படகுடன் 17 மீனவர்கள் பருத்தித்துறை கடலிலும், 2 படகுடன் 10 பேர் நெடுந்தீவு கடலிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஓகஸ்ட் மாதம் 1 படகுடன் 4 மீனவர்களும், ஒக்டோபர் மாதம் 1 விசைப்படகுடன் 5 மீனவர்களும், நவம்பர் மாதம் 2 விசைப்படகுடன் 11 மீனவர்களும், வருடத்தின் இறுதி மாதமான டிசெம்பர் 5 படகுடன் 24 மீனவர்களுமாக மொதம் 136 மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
இந்த கைதுகள், கடந்த 2015ஆம் ஆண்டினை விட 49 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதுடன், நெடுந்தீவுக் கடலிலே அதிகளவான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு 43 வழக்குகளுடன் தொடர்புபட்ட 273 மீனவர்கள் 43 படகுகளுடன் கைதுசெய்யப்பட்டிருந்த அதேவேளை, 2016 இல், 28 வழக்குகளுடன் தொடர்புபட்டிருந்த 136 மீனவர்கள் 28 விசைப்படகுடன் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.