செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டுப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவது உள்ளிட்ட, நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
உண்மை, நீதி தொடர்பாக சிறிலங்கா மக்களிடையே பரந்துபட்ட ரீதியில் நடத்தப்பட்ட முதலாவது ஆய்வு ஒன்றில், மக்களின் அபிலாசைகள் வெளிப்படுததப்பட்டுள்ளன என்றும் அதனை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
இந்தக் கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று உடனடியாக அறிவித்த அமைச்சர்கள் தொடர்பாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
“இடைக்கால நீதி தொடர்பாக, பரந்துபட்ட கலந்தாய்வுகளை நடத்திய செயலணியின் பரிந்துரைகள் மீது உறுதியான நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் எடுக்க வேண்டும்.
செயலணியின் முக்கியமான பரிந்துரைகளை அரசாங்கம் கிடப்பில் போடக்கூடாது.
ஜெனிவாவில் உள்ள அரசாங்கங்களுக்காக மட்டுமன்றி, போருக்குப் பின்னர் நீதியையும் நல்லிணக்கத்தையும் எதிர்பார்க்கின்ற தமது சொந்த மக்களுக்காக, அரசாங்கம் இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.