Breaking News

நச்சு வாயுக்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட யுத்தம்: விக்ரமபாகு கருணாரத்ன



நச்சு வாயுக்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டதாக நவசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஆவர்,

”தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு எக்நெலிகொட தயாராக இருந்ததோடு, அந்த யுத்தத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டுமென வலியுறுத்தி வந்ததாகவும்

நச்சுத்தன்மை வாயுக்களை பயன்படுத்தி இராணுவம் யுத்தத்தில் ஈடுபடுவதாகவும், அது சர்வதேச ரீதியில் தவறு எனவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் என்னிடம் கூறினார்.

யாரும் யுத்தத்திற்கு எதிரானவர்கள் எனவும், எனினும் இந்த யுத்தம் சட்டத்திட்டங்களுக்கு மாறாக நடைபெறுவதாகவும் அதற்கு எதிராக செயற்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். அது தொடர்பிலான ஆவணங்களுடயே அவர் காணாமற்போயிருந்தார். அவரை கடத்திச் சென்றவர்கள், கடத்தப்பட்ட இடம், கடத்திச் சென்று வைத்திருந்த இடம், கடத்திச் சென்றவர்கள் என அனைத்து தகவல்களும் தெரிந்தும் இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை.

இதற்கு காரணம் நீதித்துறையில் காணப்படும் குறைபாடா? அல்லது சட்டவிரோதமான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படும் உண்மையை வெளிப்படுத்திவிடுவரோ என்ற சந்தேகத்தில் அவருக்கு எதிராக செயற்பட வேண்டுமென்ற எண்ணத்திலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எக்நெலிகொட வெளிநாட்டில் இருப்பதாக பொய்யான தகவல்களை பரப்பினார்கள். அதனை சாதாரண தமிழ் மக்களுக்கு எதிராக விட யுத்தத்தின் அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து அதற்கு எதிராக செயற்பட்டதால் அவர் படுகொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுகின்றது.

பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் ஜனநாயக ஆட்சி ஒன்றை ஏற்படுத்தினால் அந்த அரசாங்கமும் இந்த நாட்டில் சாதாரண யுத்தம் ஒன்றே நடைபெற்றது எனவும் சட்டவிரோதமாக எதுவும் நடைபெறவில்லை எனவும் கூற முயற்சிக்கின்றது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் நடைபெற்ற யுத்தம் அவசியமானன ஒன்று அல்ல, துரதிர்ஷ்டமான ஒன்று இந்த யுத்தத்தில் ஈடுபட்டவர்களை வீரர்கள் என கூறிக்கொள்வதில் வெட்கப்பட வேண்டும் அப்படியாயின் இரண்டு பக்கத்திலும் வீரர்கள் இருக்க வேண்டும்.

இது தேவையற்ற ஒரு யுத்தம். என்னைப் பொருத்தவரையில் பிரபாகரனுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து, விச வாயு பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தை நிறுத்தி, இரத்த ஆறு ஓடுவதை நிறுத்திய ரணில் விக்ரமசிங்கவே என்னை பொருத்தவரை யுத்த வீரன்.

அவர் ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம் வேறு குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுப்பவராக இருக்கலாம் எனினும் அவரை நான் யுத்த வீரனாக மதிக்கின்றேன்”. என தெரிவித்தார்.