நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம்!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் அரசாங்கத் தரப்பினருக்கும் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் கூட்டு எதிரணியினருக்குமிடையில் விவாதம் நடைபெற்றது.
அமெரிக்காவைத் தளமாகவும், சட்டத்தரணி உருத்திரகுமாரனை தலைவராகவும் கொண்டியங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறீலங்காவின் இருப்புக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குகின்றது என கூட்டு எதிரணியைச் சேர்ந்த உதய கம்மன்பில தெரிவித்துள்ளதுடன் இவ்வச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை எந்தவொரு நாடும் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளதுடன், கூட்டு எதிரணியினர் அமைத்துள்ள நிழல் அரசாங்கத்தைப் போன்றே நாடு கடந்த அரசாங்கமும் கனவுலகில் ஆட்சி நடத்துபவர்கள் என்று ஏளனம் செய்துள்ளார்.
மங்கள சமரவீர “அவுஸ்திரேலியாவின் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சனத்தொகை கணக்கெடுப்பில் பிறந்த நாடு என்பதற்கு தமிழீழம் என தனியாக குறிப்பிடமுடியும் எனவும் அதன் மூலம் தமிழீழம் எனக் குறிப்பிடுவோர் தனியான பகுதியினராக கணக்கெடுப்பில் உள்ளடக்கப்படுவார்கள் எனவும் அறிவித்திருந்தது.
எனினும் இது தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் அந்நாட்டு அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சுடன் பேசியிருந்தோம். அதன் பின்னர் தமிழீழம் என்ற நாட்டை ஒருபோதும் அங்கீகரிக்கப்போவது இல்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்ததது. அத்துடன் தமிழீழம் என்ற நாட்டு பிரஜைகள் என எவரையும் அடையாளப்படுத்தும் எந்தவொரு தகவலையும் அவுஸ்திரேலியா வெளியிடவில்லை.
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் மூன்று வருடங்களுக்கு தடை செய்வதாக அறிவித்திருந்தது. டென்மார்க் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள இணையத்தளத்தில் வீசா விண்ணப்பம் செய்யும் நாடுகளின் வரிசையில் தமிழீழமும் உள்ளடக்கப்படிருந்தமைக்கு அந்த நாடு பின்னர் மன்னிப்புக் கோரியிருந்தது. ஆகவே சர்வதேச ரீதியில் தமிழீழம் என்ற நாட்டையோ, விடுதலைப் புலிகள் அமைப்பையோ அங்கீகரிக்கவில்லை என்பது தெளிவாகின்றது.“
கேள்வி உதய கம்மன்பில “ருத்தரகுமார் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நாடு கடந்த தமிழீழ கூட்டத்தை நடத்தி தீர்மானங்களை மேற்கொள்கின்றார். இது தொடர்பில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சுக்கு தெளிவுபடுத்தி அதனை தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றதா“?
பதில் மங்கள சமரவீர “நாடு கடந்த தமிழீழம் என்பது எந்த ஒரு அமைப்போ, அல்லது நாடோ ஏற்றுக்கொள்ளாத ஒரு விடயம். ஏன் கூட்டு எதிர்க்கட்சியும் யாரும் ஏற்றுக்கொள்ளா ஒரு விடயம். அந்த கட்சி நிழல் அமைச்சரவை ஒன்றை அமைத்து அதன் பிரதமராக ஒருவரை நியமித்தும் செயற்பட முடியும். யாருக்கும் தங்களது வீட்டிற்குள் கனவில் அரசாங்கத்தை அமைக்க முடியும். எனினும் அதனை யாரும் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை எனவும் தெரிவித்தார்.