Breaking News

மிலேனியம் சவால் நிதிய உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் ஆய்வு



போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலீடுகள் மற்றும் வர்த்தக முயற்சிகள், வேலைவாய்ப்பு தொடர்பாக அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மிலேனியம் சவால் நிதியத்தின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிறிலங்காவுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பிரதி உதவித் தலைவர், பாத்திமா சமர் தலைமையிலான குழுவொன்று சிறிலங்காவில் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இந்தக் குழுவினர் கொழும்பில் சிறிலங்கா அரச மற்றும் தனியார் துறையினருடன் பேச்சுக்களை நடத்தி விட்டு, நேற்று கிளிநொச்சிக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள், கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை மற்றும் பழங்கள் பதனிடும் மையம் ஆகியவற்றுக்குச் சென்று முதலீடுகள், வர்த்தக முயற்சிகள், வேலை வாய்ப்புகள் குறித்த நிலைமைகளை ஆய்வு செய்தனர்.

மிலேனியம் சவால் நிதியத்தின் ஊடாக, சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.