தனிமையில் இருந்த கர்ப்பிணிப் பெண் வெட்டிக்கொலை; இருவர் கைது
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் தனிமையில் வீட்டில் இருந்த 27 வயதுடைய 7 மாதக் கர்ப்பிணிப் பெண்ணொருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு பொது மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டமையினால் ஊர்காவல்துறை பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
ஊர்காவற்துறை - சுருவில் பகுதியிலுள்ள வீடொன்றில் திருட்டுச் சம்பவத்திற்காக பெண் ஒருவர் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளனர்.
இதன்போது, வீட்டில் தனிமையில் இருந்த ஒரு பிள்ளையின் தாயும் 7 மாதக் கர்ப்பிணியுமான 27 வயதுடைய நாநேந்திரன் கம்சிகா என்ற பெண்ணை தடியால் அடித்தும், வெட்டியும் கொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து, முச்சக்கர வண்டியில் தப்பியோட முற்பட்ட போது, பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இரு இளைஞர்கள் ஊர்காவல் துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஊர்காவற்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொலை சம்பவம் இடம்பெற்ற வீட்டினை ஊர்காவல்துறை நீதவான் வை.எம்.எம்.ரியால் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது குறித்த பெண்ணை வீட்டு அறையினுள் வைத்து கடுமையாக தாக்கியுள்ளதுடன் வீட்டிலிருந்த கத்தியை பயன்படுத்தி வெட்டியுள்ளனர்.
அத்துடன் வீட்டிலிருந்த இரத்த கறைகளையும் சந்தேக நபர்கள் கழுவிய நிலையில் பெண்ணை வீட்டு முற்றத்திற்குள் இழுத்து வந்து தடியினால் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் கொலைச் சந்தேக நபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியிலிருந்த பெண்ணையும் முச்சக்கர வண்டி சாரதியையும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊர்காவல் துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.