Breaking News

கிடைக்க இருந்த உரிமையை தாரைவார்த்துக் கொடுத்த தலைமை

தாரைவார்த்தல் என்றொரு சொல் நம் தமிழ் மொழியில் உண்டு. இச்சொல்லை அவ்வளவு நல்ல சொல்லாக யாரும் கருதுவதில்லை. அதற்குக் காரணமும் உண்டு.

தாரைவார்த்தல் என்பது தனக்குத் தேவையாக இருப்பதை மற்றொருவருக்குக் கொடுத்து தன்னையும் தன்னோடு சார்ந்தவரையும் ஏது மற்றவராக்குவது என்பது ஒரு பொருள் இதற்கு இன்னுமொரு பொருளும் உண்டு.

அதாவது எமக்கு இருக்கின்ற உரிமையை மற்றவருக்குக் கொடுத்து தன்னையும் தன் சார்ந்தவர்களையும் கந்தறுக்கச் செய்வது. 

இத்தகையை பொருளைக் கொண்டதுதான் தாரைவார்த்தல் என்ற சொற்பதமாகும். தாரை வார்த்தல் என்பதை தானம் செய்வதாக, ஈகை செய்வதாக யாரும் பொருள்படுத்தி விடாதீர்கள். அவ்வாறான பொருள்படுத்தல் மிகப்பெரும் தவறு. தானம் என்பது வேறு தாரைவார்த்தல் என்பது வேறு.

தாரைவார்த்தல் என்ற சொற்பதத்தின் பொருளை செயல்வழி உதாரணத்தினூடாக விளக்குவதாக இருந்தால், அதற்கு எங்கள் தமிழ் அரசியல் தலைமையாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்ததைக் கூறுவதே பொருத்துடையதாக இருக்கும்.

போருக்குப் பின்பு சர்வதேச நாடுகள் தமிழினத்துக்காக குரல் கொடுத்தன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. கூடவே ஈழத் தமிழர் வரலாற்றில் என்றுமில்லாத அளவில் இலங்கைத் தமிழினம் தொடர்பில் உலக நாடுகளும் ஐ.நா அமைப்பும் கவனம் செலுத்தின.

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டே ஆகவேண்டும் என்று விடாப்பிடியாக நின்றன. இதில் அமெரிக்காவின் நிலைப்பாடு எமக்கு மிகுந்த சாதகமாக இருந்தது.

எனினும் எங்கள் தமிழ் அரசியல் தலை மையை இலங்கை ஆட்சியாளர்கள் சிக்கனப் பிடித்துக் கொண்டனர். பதவிகளை வழங்கினர். இதன் காரணமாக எங்கள் அரசியல் தலைமை, போருக்குப் பின்பு ஈழத் தமிழர்களுக் குக் கிடைக்கப் பெற்ற மிகப்பலத்த சர்வதேச ஆதரவை அப்படியே தாரைவார்த்து தண்ணீ ரில் விட்டனர்.

இலங்கையில் இருக்கக்கூடியது நல்லாட்சி என்றும் அவர்கள் எங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பர் என்பது போலவும் சர்வதேசத்தின் மத்தியில் காட்டிக் கொண்டனர்.

இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் விடுதலைப் புலிகளும் குற்றம் செய்துள்ளனர் என்றும் முஸ்லிம் மக்களை வடக்கில் இருந்து புலிகள் வெளியேற்றியது தவறு என்பது போலவும் உலக நாடுகள் மத்தியில் கூறிக்கொண்டனர்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழின அழிப்பு நடந்ததாலேயே சர்வதேச நாடுகள் எங்கள் விடயத்தில் அதீத கவனம் செலுத்தினவாயினும் சம்பந்தம் இல்லாமல் இதற்குள் முஸ்லிம் மக்களின் இடப்பெயர்வுகளையும் விடுதலைப் புலிகளின் முன்னைய தாக்குதல் சம்பவங்களையும் புகுத்தி இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் அழுத்தத்தை வலுக்குறைப்புச் செய்தனர். இதன் விளைவு இன்று தமிழர்களுக்கு எது வுமில்லை என்றாகிவிட்டது.

ஆம், எமக்காகக் குரல் கொடுத்த அமெரிக்காவின் ஆட்சித் தலைமையில் இப்போது மாற்றம். ட்ரம்ப் ஜனாதிபதியாகியுள்ளார். அவர் இலங்கை அரசுக்கு உதவத் தயாராகிவிட்டார்.


என்ன செய்வது எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை தாரைவார்த்துவிட்ட எங்கள் அரசியல் தலைமை இனி என்னதான் செய்யப் போகிறதோ யார் அறிவார்.