Breaking News

ஜெனிவாவில் இலங்கைக்கு காலஅவகாசம் வழக்கும் தீர்மானம் – பிரித்தானியா முன்வைக்கும்?



ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் காலஅவகாசம் கோரவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29ஆவது அமர்வில் சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறை ஒன்றுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தில் பொறுப்புக்கூறல் தொடர்பாக கூறப்பட்டிருந்த பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்த நிலையில், ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்றும் எனினும் அதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அண்மையில் பிரித்தானியா சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு அடுத்தமாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள நிலையில், சிறிலங்கா தொடர்பான 29ஆவது அமர்வின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்ற முழுமையான அறிக்கை ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே, ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா காலஅவகாசம் கோரவுள்ளது.

இதற்கு 2012, 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் சிறிலங்கா தொடர்பான தீர்மானங்களை அமெரிக்காவே முன்வைத்து வந்தது.

எனினும், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தையடுத்து, அடுத்த சில மாதங்களுக்கு அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை நிச்சயமற்றதாக இருக்கும்.

இதனால், சிறிலங்காவுக்கு கால அவகாசத்தை அளிக்கும் தீர்மானத்தை, பிரித்தானியா முன்னின்று நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.