Breaking News

நீங்கள் ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை! வடக்கு மாகாணசபை மீது அமைச்சர் நிமால் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாகாண சபைகளின் அதிகாரங்களை அதிகரிக்குமாறு வலியுறுத்தி வருகின்ற போதும் ஏற்கெனவே மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களைக் கொண்டு இன்னும் ஆக்க பூர்வமாக எந்த பணிகளையும் வடக்கு சபை முன்னெடுக்கவில்லை என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.


வவுனியா மத்திய பேருந்து நிலைய கட்டிடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடிசில்வா  இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வட மாகாணசபையில் நான் குறைபாட்டை காண்கின்றேன். நீங்கள் (வடக்கு முதலமைச்சர்) அதிகமாக அதிகாரம் வேண்டும் என கேட்கின்றீர்கள். அது நியாயமானதுதான். ஆனால் உங்களுக்கு வழங்கிய அதிகாரங்களை கூட நீங்கள் சரியான நேரத்தில் ஆக்கபூர்வமாக பயன்படுத்தியதாக நான் அறியவில்லை.
எமது ஜனாதிபதி தலைமையில் இராணுவத்திடம் இருந்து பல காணிகள் விடுவித்து தரப்பட்டுள்ளது. ஆனால் அந்த விடுவிக்கப்பட்ட காணிகளில் ஏதாவது பயன்படக் கூடிய வகையில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?.

இரண்டு மில்லியன் ரூபா ஒரு வீட்டுக்கு என ஒன்றரை வருடங்களாக அரசாங்கம் பணத்தை ஒதுக்கி தந்துள்ளது. வீடுகளை கட்டினீர்களா?
இது எங்களுக்கு பாரிய பிரச்சினை.பால் போத்தலை கேட்கின்றனர். பால் கொடுக்கின்றோம். ஆனால் அவர்கள் பாலை குடிக்கின்றார்கள் இல்லை.

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் சிறுபான்மை இனத்திற்கான உரிமையை பெற்றுக்கொடுக்கவேண்டும் என செயற்படும் அரசாங்கம். ஆகவே அந்த அரசாங்கத்திடம் இருந்து நீங்கள் பிரயோசனங்களை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய பகுதியில் உள்ள பிரச்சினையை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள்.

அனைத்து மாகாணங்களிலும் கூட மாகாணங்களுக்கிடையிலான செயற்றிட்டங்களை கொண்டு வந்து செயற்படுத்துகின்றனர். ஊவா மாகாணத்தில் கூட அது தாமதமாகி அண்மையில் செயற்படுத்தியிருந்தனர். இவை மாகாண ரீதியில் செய்யப்படவேண்டடிய விடயங்கள்.

வட மாகாணசபைக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே வட மாகாணசபைக்கு பாரிய பொறுப்புள்ளது. இந்த மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் செய்ய வேண்டும். அதற்கான நிதியை ஒதுக்கி கொடுக்கவேண்டும். அதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.