புலி சார்பானவர்களே புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்றனர் ;ரத்ன தேரர்
நல்லாட்சி அரசாங்கம் சொல் தவறிவிட்டது. அரசியல் அமைப்பு மூலமாகவும் பொருளாதாரம் மூலமாகவும் நாட்டை துண்டாடும் பாதையில் அரசாங்கம் பயணிக்கின்றது. அரசாங்கத்தை சரியான பாதைக்கு கொண்டுவர ஒரு தேசிய சபையை உருவாக்குவேன் என தூய்மையான நாளைக்கான அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கவில்லை. ஆனால் அரசாங்கத்தின் பயணம் மோசமாயின் சரியான சந்தர்ப்பத்தில் மாற்றவேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.அத்துரலியே ரத்ன தேரரின் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கம் மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை கொடுத்ததோ அதை சரியாக முன்னெடுக்க வில்லை. மிகவும் மோசமான பாதையினை தெரிவு செய்து பயணிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் தனது ஆட்சிக் காலத்தில் செய்வதாக கூறிய வாக்குறுதிகளை மீறி மக்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவது தொடர்பில் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் அரசியல் குழப்பங்கள் மற்றும் பிரதான பிரச்சினைகளுக்கு மத்தியில் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது இலகுவான காரியம் அல்ல.
குறிப்பாக இந்த தேர்தலை எடுத்துக்கொண்டால் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் தனி அரசாங்கம் உருவாக்க மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. நாட்டுக்கு தேவையான சட்டமூலங்களை அல்லது உறுதியான தீர்மானங்களை எடுப்பதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இன்று ஸ்திரமற்ற அரசாங்கம் இல்லாது முழு நாடும் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை நீக்க முன்னர் பிரதானமாக மூன்று காரணிகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அதிகாரப் பகிர்வின் மோசமான நகர்வுகள் அதிகாரப் பகிர்வு என்பதை நாம் கருத்தில் கொண்டு செயப்பட வேண்டும். இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கு இந்தியாவினால் திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகலருக்கும் தெரிந்திருக்கும். மாகாண அதிகாரங்களை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது அப்போதே நாட்டில் மிகப்பெரிய கிளர்ச்சி உருவாக்கப்பட்டது. அரசியல் ரீதியிலும் ஆயுதம் ஏந்தியும் பாரிய புரட்சி வெடித்தது. மக்கள் விடுதலை முன்னணி எடுத்த இந்த முயற்சியின் விளைவாக இந்த நாட்டில் 65ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவர். அதை தடுக்க முடியாது. ஆனால் இவ்வாறான நிலைமைகளை தடுத்து உயிர் இழப்புகளை தடுத்திருக்க முடியும் .ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்ததின் விளைவாக நாம் 65 ஆயுரம் உயிர்களை இழந்தமையே எமக்கு கிடைத்த பலனாகும்.
அதேபோல் பாரிய இழப்பு களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. அதன் பின்னரே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டோம். அப்போது 13ஆம் திருத்தத்தை கொண்டுவர சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா அல்லது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்ற முடியுமா என சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இந்த விவகாரங்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்பட்டன. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் தான் நாட்டின் ஐக்கியம் தங்கியுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால் நாட்டின் ஐக்கியம் இல்லாது போய்விடும் என அப்போது தீர்மானிக்கப்பட்டது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க இடமளியோம் எனினும் நிறைவேற்று ஜனாதிபதியின் சர்வாதிகாரம் குறைக்கப்பட வேண்டும். அநாவசிய அதிகாரங்களை வழங்கி ஜனாதிபதியை சர்வாதிகாரியாக மாற்றும் முறைமை அவசியம் இல்லை என நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெரிவித்தோம். ஆனால் முழுமையாக ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என நாம் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட அவர் நிறைவேறு ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக தெரிவிக்கவில்லை. மும்மொழிகளிலும் அதை தெளிவாக தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதிக்கு உள்ள பொறுப்பு இன்றும் அவருக்கு உள்ளது. அதன் மூலம் தான் நாட்டின் ஐக்கியத்தை காப்பாற்ற முடியும்.
புலிகளை ஆதரிப்பவர்களே அரசியல் அமைப்பை உருவாக்குகின்றனர் மேலும் அரசியலமைப்பை உருவாக்கி நாட்டை முழுமையாக சீரழிக்க வேண்டும் என நாம் ஒருபோதும் குறிப்பிடவில்லை. சர்வஜன வாக்கெடுப்பு இல்லாது புதிய அரசியல் அமைப்பை உருவாக்க மாட்டோம் என ஜனாதிபதி தெளிவாக தெரிவித்துள்ளார். சர்வஜன வாக்கெடுப்பு எனும்போது நாட்டின் தேசிய கீதம்,தேசியக் கொடி மற்றும் ஐக்கிய இலங்கை என்ற வார்த்தைகள் உள்ளடக்கப்படுகின்றன. ஆகவே அது தொடர்பில் அப்போதே ஜனாதிபதி தெளிவாகத் தெரிவித்துள்ளார். இப்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் நியமிக்கப்பட்ட உப குழுக்கள் மூலம் சட்டமூலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தில் முழுமையாக ஐக்கிய இலங்கை என்ற பதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த நகர்வுக்கு நாம் முழுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம். சர்வஜன வாக்கெடுப்பிற்கு மாறாக எந்த அரசியல் அமைப்பையும் கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எந்த அதிகாரமும் இல்லை .
இந்த அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதி முறைமையை நீக்குவது நாட்டின் ஐக்கியத்தை இல்லாதொழிக்கும் நகர்வாகும். கடந்த காலத்தில் புலிகளுக்கு துணைபோன, பயங்கரவாதத்தை பலப்படுத்திய, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது என கூறியவர்கள் தான் இன்று புதிய அரசியலமைப்பையும் உருவாக்குகின்றனர். ஒரு சிறிய குழுவினரே இந்த அரசியலமைப்பை உருவாக்கி வருகின்றனர். இவர்களுக்கு மக்களின் கருத்து அவசியம் இல்லை. நாட்டின் நிலைமைகள் அவசியம் இல்லை. இவ்வாறான ஒரு அரசியலமைப்பு இப்போது கொண்டுவரப்படுவது நாட்டில் அனாவசிய பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்பாக அமையும். இப்போது ஏதோ ஒரு வகையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னெடுத்து செல்லப்படும் நகர்வுகளை கூட அழிக்கும் வகையில் இந்த நகர்வுகள் அமைந்துவிடும். பயங்கரவாதத்தை ஒழிக்க எவ்வாறு நாம் முன்வந்தோமோ அதேபோல் நாட்டின் ஸ்திரத் தன்மையை இல்லாதொழிக்கும் இந்த புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
தேர்தல் முறைமை நீக்குவதாக பொய்களை கூறுகின்றனர் தேர்தல் முறைமையை இல்லாதொழித்து மீண்டும் பழைய நிலைமைக்கு எம்மால் போக முடியாது. பழைய முறைமையில் நல்ல நகர்வுகளும் இருந்தன. அதைவிடவும் மோசமான நிலைமைகள் காணப்பட்டன. ஆகவே சரியான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் ஆரோக்கியமான அரசியல் நகவுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தோம். கடந்த காலத்தில் தேர்தல் முறைமை மூலம் நடைபெற்ற ஊழல் மற்றும் சட்டவிரோத நகர்வுகள் அனைத்தையும் நாம் கவனித்தோம். அவற்றை மாற்றுவதாக கூறினார்கள். ஆனால் இன்றுவரை அது தொடர்பில் எந்த முனேற்றமும் இல்லை. புதிய தேர்தல் முறைமை உருவாக்கப்பட வேண்டும் என கூறி அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து இப்போது பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என கூறுகின்றனர். ஆகவே அதை காரணமாகக் கொண்டு இப்போது உள்ளூராட்சி தேர்தலை நடத்தவும் காலத்தை கடத்துகின்றனர். ஆகவே புதிய முறையில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். ஜனாதிபதி உடனடியாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை நாட்டு மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை கொடுத்தோமோ அதை நிறைவேற்ற வேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்க வேண்டும் என கூறினோம். அதில் ஒருசில ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.ஆனால் சில முக்கியமான ஆணைக்குழுக்கள் இன்னும் உருவாக்கபப்படவில்லை. குறிப்பாக கணக்காய்வாளர் ஆணைக்குழு போன்றவை அவசியம். 19ஆம் திருத்தம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அரசியல் அமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலர் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். மத சார்பற்ற இராச்சியமாக உருவாக்கப்பட வேண்டும் என கூறுகின்றனர்.உண்மையில் நாம் மத சார்பான நாடு அல்ல.எனினும் பௌத்தம் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. ஆனால் நாம் மத சார்பு நாடு அல்ல. இங்கு சகல மதத்தினரும் சம உரிமையுடன் வாழவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்தம் என சுட்டிக்கட்டப்பட்டுள்ளதால் அது பெரிய முக்கியத்துவம் இல்லை. அது அவசியமும் இல்லை. ஆனால் இப்போது கொண்டுவரும் அரசியல் அமைப்பில் அது சுட்டிக்காட்டப்பட்டு குழப்பங்களை உருவாக்கும்வகையில் அமைந்துள்ளது. ஆகவே இவ்வாறான மோசமான உறுப்புரைகளை உள்ளடக்கி குழப்பங்களை ஏற்படுத்த நாம் இடமளிக்க மாட்டோம். மாகாண அதிகாரங்கள் பற்றி பேசுகின்றனர்.
காணி அதிகாரம் உண்மையில் மாகாணங்களுக்கு வழங்குவது அவசியமில்லை. வடக்கு தமக்கான காணி அதிகாரத்தை கோருகின்றது. ஆனால் அது வழங்கப்பட்டால் அது நாட்டில் வேறு சிக்கல்களை உருவாக்கிவிடும். வடக்கை போன்றே மத்திய மாகாணம் முரண்பட்டால் வட மாகாணத்திற்கு தண்ணீர் கிடைக்காது போய்விடும். மத்திய மாகாணம் நாட்டின் இருதயம். இவ்வாறு முரண்பாடுகளை ஏற்படுத்தி குழப்பங்களை கொண்டுவந்தால் இறுதியில் மக்களுக்கு குடிக்கவே தண்ணீர் கிடைக்காது போய்விடும். ஆகவே மாகாண முதல்வர்களுக்கு ஏற்ற வகையில் மத்திய அரசாங்கம் செயற்பட முடியாது. மத்திய அரசாங்கமே காணி அதிகாரங்களை வைத்துகொள்ள வேண்டும். அதேபோல் அனைத்து மக்களும் சகல பகுதிகளிலும் வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதார கொள்கை மோசமானது தேசிய அரசாங்கத்தை உருவாக்கியவுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து பலமான பொருளாதார கொள்கையை உருவாக்குவார்கள் என நினைத்தோம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதார நகர்வுகள் மோசமானதாக அமைந்துவருகின்றன . இன்று நாடு முழுமையாக சர்வதேச நாடுகளுக்கு விற்கப்படுகின்றது. எமது நிலத்தை சர்வதேச நாடுகளுக்கு விற்க அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. எமது மக்களின் நிலங்களில் எமது மக்கள் வாழும் பகுதிகளில் சர்வதேச நாடுகளின் நிறுவனங்களை உருவாக்குவது எம்மையே பாதிக்கும். அரசாங்கம் செய்யும் இந்த நகர்வுகள் மோசமானவையாகும். .அதேபோல் துறைமுக திட்டங்களை எடுத்துக்கொண்டால் அதிலும் சட்டவிரோதமாக அரசாங்கம் நடந்துகொள்கின்றது.
99 வருட குத்தகைக்கு துறைமுகத்தை வழங்குவது முழுமையாக தடுக்கப்பட வேண்டும். அரசாங்கம் அவ்வாறு வழங்குமாயின் முழு நாட்டு மக்களையும் இணைத்து இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட நாம் முன்வருவோம். நாட்டை விற்றும் தனியார் மயப்படுத்தியும் தவறான பொருளாதார கொள்கையை முன்னெடுத்து செல்கின்றனர். ஒரு சிலர் நாட்டை விற்கும் பொருளாதார தீர்மானங்களை எடுக்கின்றனர். இது முழுமையாக எதிர்க்கப்பட வேண்டிய விடயமாகும். சீனாவும் இந்தியாவும் எமக்கு அவசியம். அதற்காக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் நாட்டை விற்க வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கம் அவ்வாறு செய்யும் நிலையை அதை தடுக்க வேண்டியது எமது கடமையாகும்.
தேசிய சபை அவசியம் தேசிய சபை ஒன்றை நாம் உருவாக்கவுள்ளோம். இந்த சபையில் பொருளாதார வர்த்தக நிபுணர்கள், கல்வியாளர்கள், விவசாயிகள்,சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் ஆகிய அனைவரையும் ஒன்றிணைத்து தேசிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். இது ஒரு மாற்று பாராளுமன்றமாக செயற்படும் என என்னால் உறுதியாக குறிப்பிட முடியும். நாம் எந்தக் கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அனைத்து கட்சிகளையும் இணைத்து இந்த நாட்டை முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் . அதேபோல் சிவில் அமைப்புகள் மக்களின் பிரதிநிதிகளை இணைத்து ஆனால் அரசியல் சாயம் பூசாத ஒரு தேசிய சபையை உருவாக்க வேண்டும்.
இப்போது அரசாங்கத்தை வீழ்த்த அவசியம் இல்லை அதன் மூலம் அரசாங்கத்தை சரியான முறையில் வழிநடத்த வேண்டும் என எதிபார்க்கின்றேன். அதற்காக நாம் எதிர்க்கட்சி பக்கம் சாயவில்லை. இவர்களின் கொள்கைகள் என்னவென்பது எனக்கு நன்றாகவே தெரியும். மஹிந்த ராஜபக் ஷவை ஆட்சிக்கு கொண்டுவரவோ அல்லது அரசாங்கத்தை வீழ்த்தவோ நான் முயற்சிக்கவில்லை. அரசாங்கம் தவறான பாதையில் பயணிக்கின்றது. அதை சரியான பாதையதில் திருப்ப வேண்டுன்.
அரசாங்கம் பயணிக்கும் பாதை தவறானது ஆனால் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மோசமாக பயணிக்கும் நிலையில் ஆட்சி மற்றம் ஒன்று தேவைப்படும் நிலை ஏற்பட்டால் அதையும் செய்ய நாம் முன்வருவோம். ஆனால் இப்போது அதற்கான அவசியம் இல்லை. அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். இந்த அரசாங்கத்தை வீழ்த்த ஒரு சந்தர்ப்பம் வரும் அப்போது அது குறித்து சிந்திக்கலாம். இப்போது அதற்கான அவசியம் இல்லை. ஆனால் அரசாங்கத்தை நிவர்த்திசெய்ய வேண்டிய அவசியம் உள்ளது.