Breaking News

தமிழர்களை கடத்தி காணாமற்போகச் செய்த கடற்படை உயர் அதிகாரிக்கு விளக்கமறியல்



கொழும்பில் இருவரைக் கடத்தி காணாமற்போகச் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் மாபா முதியான்சலாகே தம்மிக அனில மாபாவை ஜனவரி 26ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லெப்.கொமாண்டர் தம்மிக அனில, நேற்றுமுன்தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நேற்று கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, நீதிவான் லங்கா ஜெயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கடற்படைப் புலனாய்வுப் பிரிவில் லெப்.கொமாண்டர் தம்மிக அனில் அணியாற்றிய போது, கொட்டாஞ்சேனைப் பகுதியைச் சேர்ந்த வடிவேல் பாக்கியசாமி லோகநாதன், இரத்தினசாமி பரமானந்தன் ஆகியோரை வான் ஒன்றுடன் கடத்தி காணாமற்போகச் செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.