கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளை அரசு ஏற்காது
போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்று அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
சிறிலங்கா அதிபர் மாளிகையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
“கலந்தாய்வு செயலணியின் அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது.
ஐதேக- சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கம் உள்நாட்டு நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ளது. பல்வேறு தரப்புகள் எதைச் சொன்னாலும், எமது நீதித்துறை மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
சிறிலங்கா எதிர்கொண்டு வந்த பொருளாதாரத் தடைகள் மற்றும் கலப்பு நீதிமன்ற அச்சுறுத்தல்கள், மைத்திரிபால சிறிசேன கடந்த 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பின்னர், நீங்கி விட்டன.
சிறிலங்கா தொடர்பான நிலைப்பாடுகளை அனைத்துலக சமூகம் மாற்றிக் கொண்டு விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.