Breaking News

இலங்கைக்கு உதவுவதாக ஐ.நா உறுதி



சிறிலங்காவில் வரட்சியை எதிர்கொள்வதற்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதாக ஐ.நா உறுதி அளித்துள்ளது.

சிறிலங்காவுக்கான, ஐ நாவின் வதிவிடப் பிரதிநிதி உன்னா மக்கோலி, உலக உணவுத் திட்டப் பிரதிநிதி இமெல்டா பிரெஜெனா, ஆகியோர், சிறிலங்கா அதிபர் மைத்ரிபால சிறிசே​னவை, நேற்று அதிபர் செயலகத்தில் சந்தித்து, நாட்டில் நிலவும் வரட்சி நிலை குறித்தும் அதற்கான நிவாரண ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினர்.

வரட்சி நிவாரணப் பணிகளை மேற்பார்வை செய்வதற்கான செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறித்து வரவேற்புத் தெரிவித்துள்ள, ஐ.நா பிரதிநிதிகள், இந்த அனர்த்த நிலை குறித்து அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று உதவிகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.

முதல் நடவடிக்கையாக வரட்சி நிலை தொடர்பான தொடர்பாடல், மதிப்பீடு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபுணர்களை வழங்கமுடியும் என ஐ நா பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

வரட்சி காரணமாக தொழில்களை இழந்த கிராமிய மக்களுக்கு தொழில்களை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு உணவு அல்லது பணத்தை தமது நிறுவனத்தினால் வழங்க முடியும் என உலக உணவுத் திட்ட பிரதிநிதி தெரிவித்தார்.