Breaking News

கலப்பு நீதிமன்ற பரிந்துரை – ஜனாதிபதியின் நிலைப்பாடு இன்று வெளியாகும்?

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள, கலப்பு நீதிமன்ற விசாரணைப் பரிந்துரை தொடர்பான, தனது நிலைப்பாட்டை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா அதிபராகப் பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறைவடைவதையிட்டு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.


இந்த நிகழ்விலேயே, கலப்பு விசாரணை நீதிமன்றம் தொடர்பான தமது நிலைப்பாடு குறித்து சிறிலங்கா அதிபர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, அதிபர் செயலக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை, கலப்பு விசாரணை நீதிமன்றத்தை சிறிலங்கா அரசாங்கம் ஏற்காது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும் அமைச்சர்கள் விஜேதாச ராஜபக்ச, லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, ராஜித சேனாரத்ன போன்றவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனினும், சிறிலங்கா அதிபரோ, பிரதமரோ இதுபற்றிய அதிகாரபூர்வ நிலைப்பாட்டை இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.