Breaking News

கலந்தாய்வுச் செயலணியிடம் இராணுவம், காவல்துறை தலையிடாது – பாதுகாப்புச் செயலர்

போரின் போது இடம்பெற்ற கொடுமைகள் தொடர்பாக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியுடன் கருத்துக்களைப் பகிர்ந்தவர்கள் விடயத்தில் சிறிலங்கா இராணுவமோ, காவல்துறையோ தலையீடு செய்யமாட்டாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன  ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.


கலந்தாய்வு செயலணியின் முன்பாக சாட்சியமளித்தவர்கள், கருத்துக்களைப் பகிர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று செயலணியின் தலைவர் மனோரி முத்தெட்டுவேகம கோரியிருந்தார்.

இதுதொடர்பாக அவர் கடந்தவாரம் சிறிலங்கா பாதுகாப்புச் செயலரை சந்தித்து, சாட்சியமளித்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.

இராணுவம் மற்றும் முன்னாள் போராளிகளின் நடவடிக்கைகளில் இருந்து சாட்சியங்களைச் சமர்ப்பித்தோரின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், கலந்தாய்வுச் செயலணியிடம் சாட்சியங்களை அளித்தவர்களின் விடயத்தில் சிறிலங்கா இராணுவமோ, காவல்துறையோ தலையீடு செய்யாது.

தமது கவலைகளை எடுத்துக் கூறியவர்களின் விடயங்களில் சிறிலங்கா படையினர் தலையீடு செய்வார்கள் என்ற கருத்து அடிப்படையற்றது என்றும் குறிப்பிட்டார்.