சம்பந்தன், சுமந்திரன் பதவி விலக வேண்டும்!
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் இருந்து விலக வேண்டும் என, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கை இணைக்காமை மற்றும் பௌத்த மதத்தை மட்டுமே அரச மதமாக கொண்டிருத்தல் போன்றன தொடர்பில் புதிய அரசியலமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் இருப்பது வீணானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறித்த இருவரும் பதவி விலகி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையான, வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கை ஒன்றிணைத்து சுயாதீன அதிகாரத்தை வழங்க வேண்டும் எனக் கோரியே தமிழர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், இருந்த போதும், அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு தமிழ் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாதுள்ள நிலையில், சுமந்திரன் மற்றும் சம்பந்தன் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் இருப்பது தமிழர்களுக்கு செய்தும் துரோகம் எனவும், இங்கு மேலும் கருத்து வௌியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், குறிப்பிட்டுள்ளார்.