கேப்பாபிலவு மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை என்கிறார் ரவிகரன்
கேப்பாபிலவு மக்களின் 235 ஏக்கர் காணிகளில் விடுவபடுவதாக வெளிவந்த கருத்துக்கள் முழுவதும் பொய் எனவும் ஒரு ஏக்கர் நிலம் கூட விடுபடவில்லை என்பதே உண்மை எனவும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கேப்பாபிலவு என்பது வன்னிப்பெருநிலப்பரப்பின் பூர்வீகக் கிராமங்களில் ஒன்றாகும். இது தொடர்பாக இலங்கை பிரித்தானிய காலணித்துவத்துக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையை நிர்வகித்த பிரித்தானிய ஆளுநர்களில் ஒருவரான J.P.லூயிஸ் என்பவர் தன்னுடைய manual of the vanni districts என்ற நூலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
2016இல் முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேறிய போதும் கேப்பாபிலவு மக்களுக்கு சொந்த இடத்திலான மீள்குடியேற்றம் என்பது எட்டாக்கனியானது.
இவர்களுடைய குடிநிலங்கள், விளை நிலங்களை முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகம் ஆக்கிரமித்துக் கொண்டது.
இவர்கள் தமது சொந்தக் கிராமத்தின் அருகே உள்ள சீனியா மோட்டைக் கிராமத்தில் வழங்கப்பட்ட 20 காணிகளில் வீடுகள் என்ற பெயரில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட 35,0000.00 ரூபா பெறுமதியான கூடுகளில் வற்புறுத்திக் குடியமர்த்தப்பட்டன.
கண்ணெதிரே தமது பூர்வீகக் காணிகளில் தம்மால் நடப்பட்ட வான் பயிர்கள் காய்த்து கனிந்து குலுங்குவதையும் அங்கு இராணுவம் உல்லாச வாழ்வு வாழ்வதையும் ஏக்கத்துடன் பார்த்து இவர்களது வாழ்வு கழிந்து வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் சாசனங்கள் விதிகளுக்கமைய கேப்பாபிலவு மக்கள் உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களாகவே இன்றும் கருதப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். இருந்த போதும் முல்லைத்தீவு மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் இவர்களை மீள்குடியமர்ந்தவர்களாகவே காட்டி நிற்கின்றதும் வேதனையை தரும் விடயமாகும்.
ஆனால் அன்றைய தினம் 235ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதாக இராணுவத்தால் பொய்ப்பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இது இலங்கை இராணுவத்தின் கூற்றுக்களின் நம்பகத்தன்மை அற்ற நிலையை காட்டி நிற்கின்றது.
வெளிப்படையாக நன்றாகத்திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட கேப்பாபிலவு மக்கள் 25.01.2017 அன்று அமைதிவழிப்போராட்டம் ஒன்றை தமது கிராமத்தில் நடாத்தினார்கள். இனிவரும் நாட்களில் அம்மக்களை எவரும் ஏமாற்ற முடியாது. தமது தாய் மண்ணில் தாம் குடியேறும் வரை அம்மக்கள் தொடர்ந்தும் போராடுவார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இம்மக்களுக்கு என்றும் நான் துணைநிற்பேன்” என்றார்.