வட மாகாணத்தில் அத்துமீறிய கைதுகளும் படையினரின் கெடுபிடிகளும் தொடர்கின்றன
நீதியை நிலைநாட்டுவதில் தேசிய, சர்வ தேச பொறிமுறைகள் முறையாக கடைப் பிடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வடக்கில் தற்போதும் அத்துமீறிய கைதுகளும் சட்டத்திற்கு புறம்பான பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகளும் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
கனடா நாட்டின் பிரம்ரன் நகரமானது வடக்கு மாகாணத்தின் வவுனியா நகருடன் இரட்டை நகர ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் பொங்கல் தினத்தன்று நடைபெறவுள்ள நிலையில் அங்கு சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், பிரம்ரன் நகரில் வசிக்கும் மக்களுக்கும் இடையில் பிரம்ரன் மாநகரசபை மண்டபத்தில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.இச்சந்திப்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சிறப்புரை ஆற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் ஏற்படுத்த வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். குறிப்பாக வடக்கில் தொடர்ந்தும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கில் வன்முறைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
மாகாண சபைகள் தொடர்ந்தும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டியுள்ளதால் அபிவிருத்தி நடவடிக்கைகளில் மத்திய அரசாங்கத்தினை நம்பியே செயற்பட வேண்டியுள்ளது.
யுத்த காலத்தில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான மக்களின் தேவையை உணர்ந்து அதற்காக செயற்பட வேண்டியது அவசியமாகும். நீதியை சமமாக பெற்றுக்கொள்வதில் பாரிய தடைகள் காணப்படுகின்றன. பயங்கரவாத கண்ணோட்டம் தொடர்ந்தும் நிலவுகின்றது.
நீதியானதும் சுதந்திரமானதுமான நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து மட்டத்திலும் சமமானவர்களின் வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதில் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும் என நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
நீதியை நிலைநாட்டுவதில் தேசிய சர்வதேச பொறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும். தற்போது வடக்கில் அத்துமீறிய கைதுகளும் சட்டத்திற்கு புறம்பான பாதுகாப்பு படையினரின் கெடுபடிகளும் தொடர்கின்றன.
புதிய அரசாங்கத்தினால் நல்லிணக்கச் செயற்பாட்டிக்காக தீவிர முயற்சிகள் எதுவும் காட்டப்பட்டதாக தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் செயற்படுத்தப்பட வேண்டியது அவசியம். அதற்கான தேவையும் எழுந்துள்ளது. அபிவிருத்தி செயற்பாடுகளில் நாம் பின்தங்கியுள்ளோம் போக்குவரத்து குடிநீர், குடியிருப்பு வசதிகள் போன்றன இன்னும் பல பிரதேசங்களில் இல்லாமல் உள்ளன.
2015 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி இலக்குகள் சிறப்பாக அடையப்பட்டுள்ள போதும் நிலையான அபிவிருத்திக்கான குறிகாட்டிகளை அடைய வடக்கு மாகாணம் முழுமையாக அபிவிருத்தி பாதைக்குள் இட்டுச் செல்லப்பட வேண்டும். படித்த பல்லாயிரக் கணக்காண இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.
தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத அளவு வறுமை தலை தூக்கியுள்ளது. மீள் குடியேற்ற பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கான தேவைகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
புதிய தொழில் நுட்ப வசதிகள் மற்றும் அபிவிருத்தி மூலோபாய செயற்பாடுகளில் வளர்ச்சி ஏற்பட வேண்டும். அனைத்து மட்டங்களிலும் நீதியை நிலைநாட்டக்கூடிய சமூக முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். எனவே இவ்வாறான விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது இலக்காகும் என்றார்
இந்நிகழ்வில் நூற்றக்கணக்கான கனடா வாழ் தமிழர்கள் கலந்து கொண்டதோடு கனடா பிரம்ரன் நகர மக்களால் வடக்கு மாகாணத்தில் உள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 45,000 டொலர் நிதியுதவியும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.