திருகோணமலையில் படைத்தளத்தை அமைக்க அமெரிக்காவுக்கு அனுமதி?
திருகோணமலைத் துறைமுகத்தை சுற்றி படைத்தளங்களை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாசக்கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“சீனா, இந்தியா, அமெரிக்காவுக்கு முக்கியமான பகுதிகளைக் கொடுத்து, சிறிலங்கா அரசாங்கம் வெளிநாட்டு சக்திகளின் கொலனியாக நாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது.
அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகள் சீனாவுக்கு வழங்கப்படவுள்ளது. முன்னைய அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமையவே காணிகள் வழங்கப்படுவதாக போலியான பரப்புரை செய்யப்படுகிறது.
சீன முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு 750 ஏக்கர் காணிகளை வழங்குவதற்கு மாத்திரமே, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இணங்கியது. அனால் பின்னர் அதனை விட அதிகமான நிலத்தை அவர்கள் கேட்டிருந்தனர்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு விடுவதற்கு முன்னைய அரசாங்கம் ஒருபோதும் திட்டமிட்டிருக்கவில்லை.
அம்பாந்தோட்டையில் காணிகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாடு இன்னமும் இறுதியாக்கப்படவில்லை என்று சிறிலங்கா அதிபர் கூறுகிறார். ஆனால், பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தில் உள்ளவர்கள் வேறு விதமான கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
திருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றி அமெரிக்க இராணுவ முகாம்களை அமைக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. வடக்கில் இந்தியாவின் தலையீட்டுக்கும் ஊக்குவிக்கிறது.
இதன் மூலம், மீண்டும் சிறிலங்காவை கொலனியாக மாற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.