Breaking News

புலிகளுக்கு ஆதரவளித்திருந்தால் முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்!



விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருந்தால் முஸ்லிம் மக்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி இன்று மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

வில்பத்து காடழிப்பு பிரச்சினை தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகள் தமது நிலைப்பாட்டினை தெரிவிக்கும் வகையில், கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவருடன் வடக்கிலிருந்த முஸ்லிம் மக்களும் கைகோத்திருந்தால் வில்பத்து சரணாலயம் மற்றும் இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்க மாட்டார்கள்.

1990ஆம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த காணிகளில் குடியேறும் போது, பெரும் ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரசாரம் செய்கின்றனர்.

பெரும் பாதிப்பை ஏற்படுத்திய யுத்தம் காரணமாக கடும் இழப்புகளுக்கு முகங்கொடுத்த இவர்கள், சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து அனாதைகளாக்கப்பட்டனர்.

தற்போது, அவர்களுக்கு பாரம்பரியமாக வாழ்ந்த தமது சொந்த இடத்துக்குச் சென்று குடியேறும் ஆசை மட்டுமே உள்ளது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமை காரணமாகவே இவர்கள், இந்த நிலைக்கு ஆளாகியுள்ளனர்’ என்றார்.