திருமலை தமிழ் மாணவர்கள் கொலை: ஒரு தசாப்தம் கடந்தும் நீதி கிடைக்கவில்லை
உயர்தர பரிசோதனை எழுதிவிட்டு பல்கலைக்கழக தெரிவுக்காக காத்திருந்த திருகோணமலை மாணவர்கள் ஐவர் இலங்கை சிறப்பு இராணுவ படையினரால் கைதுசெய்யப்பட்டு மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த 2006ஆம் ஆண்டு திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் 21 வயது நிரம்பிய மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமசந்திரா, லோஹிதராஜா ரோகன், தங்கத்துரை சிவானந்தா, சண்முகராஜா கஜேந்திரன் எனும் ஐந்து மாணவர்களை சுட்டுக்கொன்ற கடந்த அரசாங்கம், அவர்கள் மீது புலி முத்திரை குத்தியதோடு படையினரை தாக்க முற்பட்டதால் சுட்டுக்கொன்றதாக கொலைக்கு நியாயம் கற்பித்திருந்தது.
மிலேச்சத்தனமான இந்த படுகொலைக் குறித்து பல மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வெளியிட்ட கண்டனங்கள் மற்றும் அழுத்தங்களையடுத்து கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் ஆணைக்குழு அமைக்கப்பட்டு கண்துடைப்பு விசாரணைகள் நடைபெற்றதோடு, பின் நாட்களில் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொலை இடம்பெற்ற காலத்தில் அங்கு நிலைகொண்டிருந்த விசேட அதிரடிப்படையினரால் இப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாக கிடைக்கப்பெற்ற சாட்சிகளின் பிரகாரம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி 12 விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்யப்பட்டிருந்த போதும், வலுவான சாட்சிகள் இல்லையென தெரிவித்து அதே வருடம் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் கொலைக் குற்றவாளிகளை ண்டுபிடித்து தண்டிப்பதானது, இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை கடினமான விடயமல்லவென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நீதி மற்றும் கொள்கை வகுப்பு பணிப்பாளர் ஜேம்ஸ் ரோஸ் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
எனினும், ஒரு தசாப்தத்தைக் கடந்தும் இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமையானது இலங்கை நீதித்துறை மீது அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்திலாவது இவ் அப்பாவி மாணவர்களின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமென்ற பாரிய எதிர்பார்ப்புடன், தமது பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் காத்திருக்கின்றனர்.