முல்லைத்தீவில் காந்தி சிலை உடைக்கப்பட்டமைக்கு மாவை கண்டனம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட காந்தி சிலை உடைக்கப்பட்டமையானது பெரும் மனவேதனை தரும் விடயமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,
இச்செயலானது காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேயின் கொடிய செயலைவிட மிக கொடுமையானதும் கோழைத்தனமானதுமாகும் என்றும் விசனம் வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவமோகனின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர மத்தியில் மகாத்மா மாகாந்தி சிலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.
குறித்த சிலை கடந்த 26ஆம் திகதி இரவு அடையாளந் தெரியாதோரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்தவிடம் குறித்து மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி இந்திய போராட்ட காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து விடுதலை உணர்வூட்டியவர் என்று தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா,
மனிதகுல விடுதலைக்காகவும் இந்தியாவின் விடுதலைக்காகவும் வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் அஹிம்சை வழியில் போராடிய உலகின் மிக வலிமை மிகுந்த போராட்ட தத்துவத்தை உருவாக்கிய, உலகம் போற்றும் மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டுள்ளமைக்கு தனது கண்டனத்தை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு மானிடனும் இச்செயலை செய்திருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளதுடன், இச்செயலுக்கு யாரும் எந்த காரணமும் கூறமுடியாது எனவும் இச்செயலானது மனித குலத்தின் ஒரு இழிவுச்செயலாகும் எனவும் சாடியுள்ளார்.
இந்த விடயம் குறித்து தானறிந்தது முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுமாறு கோரியிருந்ததாக குறிப்பிட்டுள்ளதுடன்,
பண்டாரவன்னியன், வள்ளுவர், பாரதியார் மகாத்மாகாந்தி முதலான எட்டு சிலைகள் அமைக்க 2016 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்டது.
அத்தீர்மானத்தின்படி நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை உடைத்தமையின் உள்நோக்கமானது மூடச்செயலாகும் என்பது வெளிப்படை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மாக்களின் முன், வீர மண்ணில் இச்செயல் நடைபெற்றமை பாரதி பாடியமை போன்று 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்' என்று கண்ணீர் விடத்தான் வேண்டும் எனவும் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.