நல்லிணக்க செயலணியின் அறிக்கை விடுதலை புலிகளை நியாயப்படுத்துவதாக சம்பிக்க சாடல்
நல்லிணக்க பொறிமுறை குறித்த ஆலோசனை செயலணியின் அறிக்கையின் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகளை நியாயப்படுத்தி அவர்களைப் பலப்படுத்த முயற்சிப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.
நல்லிணக்க செயலணியின் அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விகரமசிங்கவினால் உருவாக்கப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் நல்லிணக்க செயலணியின் அறிக்கை கடந்த 6ஆம் திகதி நல்லிணக்க செயலணி அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையில், போர்க் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் என குற்றம்சாட்டப்படும் இராணுவத்தினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தினரை தண்டிப்பதற்கு முன்னர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 12 ஆயிரம்பேரும் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த நல்லிணக்க செயலணியின் அறிக்கையானது, நாட்டின் நல்லிணக்கத்தை குழப்பிய தமிழீழ விடுதலைப் புலிகளை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது.
விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டு, யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னரே நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் ஏற்படுத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.