ஜி.எஸ்.பி. + வரப்பிரசாதம் நல்லிணக்கத்தை தருமா? : சு.நிஷாந்தன்
மனிதவுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தமை , நல்லாட்சியை ஏற்படுத்தியமை, நாட்டின் தொழில் சட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத் தமை, சிறந்த நிதி முகாமைத்துவம், சுற்று சூழல் பாதுகாப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டதை மாற்றியமைக்க முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக் கைகள், சர்வதேச மூதலீட்டுக்கான வாய்ப்புகளை திறந்துவிட்டமை உள்ளிட்ட 27 காரணங்களில் நல்லாட்சி அரசு முன்னெடுத்த முன்னேற்றகரமான செயற்பாடுகள் காரணமாக மீண்டும் இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதித் தீர்வை கிடைத்தமை பாரிய வெற்றியாக கருதப்படுகிறது.
ஐரோப்பிய சந்தையில் உலக அளவில் அதிகளவான வருமானத்தை ஈட்டிவரும் நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. அதற்கு அடுத்ததாக தற்போது சீனா காணப்படுகிறது. குறிப்பாக 27 வீதமான ஐரோப்பிய சந்தையை சீனா வைத்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஒரு நாளைக்கு மாத்திரம் 1 பில்லியன் அமொரிக்க டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதியை சீனா மேற்கொள்கிறது.
அமெரிக்கா ஐரோப்பிய சந்தையில் ஏற்றுமதியில் முன்னணி நாடாக இருந்தாலும் வருமானம் அதிகம் பெறும் நாடாக சீனாதான் காணப்படுகிறது. காரணம் சீனாவிடம் மலிவான கூலியில் உள்ள மனித வளமே ஆகும்.
இந்தச் சந்தையில் பல வருடங்களாக இலங்கைக்கு அற்றுப்போயிருந்த ஏற்றுமதித் தீர்வை மீண்டும் கிடைக்கப்பெற்றமை மூலம் வருடத்திற்கு 1 அல்லது 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வருமானமாகப் பெற முடியும் என்று இலங்கையின் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐரோப்பிய சந்தையில் ஜி.எஸ்.பி. வரிச் சலுகை கொண்டுவரப்பட்டமைக்கு பிரதான காரணம் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பமளிப்பதற்காகும்.
குறிப்பாக 14 வறிய நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ள வரிச்சலுகையே ஜி.எஸ்.பி. பிளஸ் ஆகும். இந்த வரிச் சலுகை மூலம் குறிப்பிடப்பட்டுள்ள 7,200 பொருட்களை வரிச்சலுகை அடிப்படையில் ஏற்றுமதிச் செய்ய முடியும். அந்தச் சலுகை வழங்கப்படுவதற்கு மற்றுமொரு பிரதான காரணம் அதனைப் பெறும் நாடுகளில் ஒரு நல்லாட்சியையும், ஜனநாயக பண்புகளையும் உருவாக்குவதே மேற்குலகத்தின் நோக்கமாகும்.
பொருளாதார மேம்பாடுகளில் தமது ஆதரவை சார்ந்து நிற்கும் ஒரு நிலையை மேற்குலகம் இந்த நாடுகளில் ஏற்படுத்தியிருந்தது. 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இலங்கை அரசு அதனைப் பெற்றுக்கொண்டதுடன், அன்றுமுதல் 2008ஆம் ஆண்டுவரை வருடம் ஒன்றிற்கு 140 மில்லியன் அமெரிக்க டொலர்களை யுத்தக்காலத்தில் வருமானமாகப் பெற்றது.
மோசமான மனிதவுரிமை மீறல்கள் காரணமாக அந்த வரிச்சலுகையை இலங்கை அரசு இழந்ததால் வருமான இழப்பு ஏற்பட்டது மாத்திரமின்றி நாட்டில் பல இலட்சக் கணக்கானோர் குறிப்பாக 200,000 மக்கள் நேரடியாகவும், ஒரு மில்லியன் மக்கள் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புகளை இழந்ததாக குறித்த காலப்பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டது. வரிச்சலுகை நீடிப்புக்காக 2008 ஆம் ஆண்டு இலங்கை விண்ணப்பித்தபோது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசு அதற்கு தகுதியுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு மூன்று பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்திருந்தது.
இலங்கையில் மனித உரிமைகளும், அரசியல் உரிமைகளும் அனைத்துலக தரத்திற்கு இணையாக உள்ளதா எனவும், தொழிலாளர் உரிமைகள் பேணப்படுகின்றதா எனவும் ஆய்வுசெய்த இந்தக் குழுவினர் இலங்கை அரசு இந்த விதிகளை மீறிவிட்டதாக அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
அந்த அறிக்கை கடந்த 2009ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இலங்கைக்கான வரிச்சலுகையை நிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பரிந்துரை செய்திருந்தபோதும் ஐரோப்பிய ஒன்றியம் ஆறுமாதகாலம் இலங்கைக்கு சீர்க்குலைந்திருந்த மனிதவுரிமைகளை உறுதிப்படுத்த வாய்ப்பு வழங்கியது.
குறித்த காலப்பகுதியில் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றும் இடம்பெற்றதால் அப்போதைய மஹிந்த அரசு வடக்கு, கிழக்கு மாத்திரமின்றி தென்னிலங்கையிலும் மனிதவுரிமை மீறல்களை முன்னெடுத்திருந்தது.
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டது, ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடுக்குமுறைகள், தனி மனித சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடங்களின் அடிப்படையிலேயே குறித்த வரிச் சலுகையை ரத்துச்செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்தது. என்றாலும், அப்போதைய வெளிவிவகார அமைச்சராகச் செயற்பட்ட ஜீ.எல்.பீரிஸ் ஜி.எஸ்.பி. வரி சலுகையை இழப்பதால் இலங்கைக்கு பெருமளவாக பாதிப்பு இல்லை எனக் கூறி ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகளை நிராகரித்தமையால் ஆறுமாதங்களின் பின்னர் ஜி.எஸ்.பி. வரிச் சலுகை முழுமையாக இலங்கைக்கு இல்லாமல் செய்யப்பட்டது.
அன்றுமுதல் ஐரோப்பிய சந்தைகளுக்கு இலங்கையில் இருந்து ஏற்றுமதிச் செய்யப்படும் பொருட்களுக்கு 17வீதம் வரி அறவிடப்படுகிறது. இலங்கையின் பொருளாதாரம் பெருமளவில் அதன் ஏற்றுமதித்துறையிலேயே தங்கியுள்ளது. 76 சதவீதம் உற்பத்திபொருட்களின் ஏற்றுமதியும், 23 சதவீதம் விவசாயப்பொருட்களின் ஏற்றுமதியும் இலங்கை மேற்கொண்டுவந்தது. உற்பத்திப்பொருட்களின் ஏற்றுமதியில் 43 சதவீதம் ஆடை ஏற்றுமதியாகக் காணப்படுகிறது. 27வீத விவசாய ஏற்றுமதியில் பெருந்தோட்டப் பயிர்கள், வாசனைத் திரவியங்கள், விவசாயப் உற்பத்திப் பொருட்கள் என்பன காணப்படுகின்றன.
இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் 60 சதவீதம் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படுபவை. அது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 46 சதவீதமாகும். எனவே, மீண்டும் இழந்த சந்தை வாய்ப்பையும் ஏற்றுமதித் தீர்வையான ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையும் பெற்றுக்கொள்ள தற்போதைய மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு கடும் பிரயசித்தங்களை மேற்கொண்டது.
அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு 58 கோரிக்கைகைளை இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதிப்பதாகக் கூறியது என்றாலும், இலங்கை அரசுக்கு, ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட கலந்துரையாடலின் பிரகாரம் 27 பிரேரணைகளாக மாற்றியமைக்கப்பட்டது. அவற்றில் முக்கியமானவைகளே மேற்கூறப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல், மனிதவுரிமைகள் மற்றும் தொழில் சட்டங்களை உறுதிப்படுத்தல், நல்லாட் சியை ஏற்படுத்த உள்ளிட்ட 27 காரணங்களாகும்.
கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் நல்லாட்சி அரசு முன்னெடுத்துவரும் பல்வேறு முன்னேற்றகரமானச் செயற்பாடுகளின் நிமித்தமே மீண்டும் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை வழங்க ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு முன்மொழிவதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு கடந்த புதன் கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையில் எதிர்வரும் நான்கு மாதங்களின் பின்னர் ஜி.எஸ்.பி. தீர்வை முழுமையாக இலங்கைக்கு கிடைக்கப் பெறவுள்ளது.
இதன் காரணமாக இதுவரை காலமும் ஏற்றுமதித் தீர்வையில் ஐரோப்பிய சந்தையில் ஏற்றுமதிச் செய்த இலங்கைக்கு தீர்வையின்றி ஏற்றுமதி செய்யும் சூழல் உருவாகியுள்ளதால் பாரிய வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி இந்த ஆண்டில் மாத்திரம் 1பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெறமுடியுமென கணித்துள்ளனர். அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதித் தடையும் நீக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஆறு மாதங்களில் 1,200 மெட்ரிக்தொன் மீன் ஏற்றுமதி இடம்பெற்றுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைக்கப்பெற்றுள்ளது. வரிச் சலுகை காணப்படும் 7,200 பொருட்களில் மீனும் அடங்குகிறது. இதன்மூலம் மீன் ஏற்றுமதியில் பாரிய வருமானத்தை இந்த ஆண்டு இலங்கை பெறக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.பி. வரிச் சலுகை கிடைக்கப்பெற்றமைத் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை நிதி அமைச்சில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியிருந்ததாவது,
""ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றதன் மூலம் சர்வதேச முதலீட்டாளர்கள் எவ்வித தடையுமின்றி இலங்கையில் முதலீடுளை மேற்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அனுபவித்துவந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது என்பதுடன், அஸ்தமனமாகியிருந்த பொருளாதாரமும் அபிவிருத்திப் பாதையில் இனி பயணிக்கும்'' என்றார்.
மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தை மீள நிலைப்படுத்தியதன் மூலமே, இலங்கைக்கு மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்துள்ளது என்று பிரமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஜி.எஸ்.பி. வரிச் சலுகை மீள கிடைக்கப்பெற்றமையால் எமது பொருளாதாரம் பலமானதாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தின் போது ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலினா மோர்களிடம் விடுத்த விசேட கோரிக்கையின் நிமித்தமே குறுகிய காலத்துக்குள் இந்தச் சலுகை கிடைக்கப்பெற்றுள்தாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இலங்கையில் ஏற்றுமதியில் ஐரோப்பிய சந்தை முக்கிய புள்ளியாகக் காணப்படுவதால் எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம் வலுவடையக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டில் ஆசியாவில் சிறந்த நிதி முகாமைத்துவம் செய்ய நாடாக நிதி அமைச்சருக்கு லண்டனை தளமாக கொண்டு இயங்கும்.
"தி பங்கர்' சஞ்சிகை ஆசியாவின் சிறந்த நிதி அமைச்சருக்கான பட்டத்தையும் வழங்கியது.
நிலை பேண்தகு அபிவிருத்தி மற்றும் பலமிக்கதொரு இலங்கை அபிவிருத்தி என்ற அடிப்படையில் ஏற்றுமதியை மையமாகக் கொண்டு இலங்கையின் பொருளாரத்தை மாற்றியமைக்க அரசு எண்ணியுள்ள சூழலில் முதலீடுகளின் உட்பாய்ச்சலுக்கான சந்தர்ப்பதை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
எனவே, நல்லிணக்கத்தையும், சமாதானத்தை கட்டியெழுப்புவதன் மூலம் இலங்கை சர்வதேச அரங்கில் தமக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
கூட்டு எதிரணியின் எதிர்ப்புகளால் நாட்டில் காணப்படும் ஸ்திரமற்ற அரசியல் சூழலில் சவால்களை வெற்றிகொண்டு சமாதானம், நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்பி எவ்வாறு அபிவிருத்திப் பாதையில் மைத்திரி ரணில் அரசு பயணிக்கப் போகிறது என்று சர்வதேச நாடுகள் உற்று நோக்கிய வண்ணம் உள்ளன.
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்