இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் உள்ளார்களா? கூட்டமைப்பு சபையில் கேள்வி
வவுனியாவில் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போன உறவினர்களுக்கு ஏதாவது நடந்தால், வடக்கு கிழக்கில் தேசிய நல்லாட்சி தொடர்பாக முழுமையாக ஆராய வேண்டி ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரண்டாவது நாளாக உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போன உறவினர்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பான பதிலைக் கூற வேண்டும் என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் பிணை, முறிகள் விற்பனையில் இடம்பெற்ற மோசடி தொடர்பான விவாதம் நேற்று ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,
இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமிழ் உறவுகள் இருக்கின்றார்களா? இல்லையா என்பதை ஆளுங்கட்சி உறுப்பினர்களால் தற்பொழுது கூறமுடியுமா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் எதனை நல்லாட்சி அரசாங்கம் செய்ததாகக் கேள்வியெழுப்பிய அவர்,
தற்பொழுது பெரும்பான்மையின மக்களை இனவாதிகளுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் பிழையாக வழிநடத்திச் செல்லும் நிலையில் எவ்வாறு நல்லிணக்கத்தைக் கொண்டுவர முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை செய்தும் கூட, முன்னாள் விடுதலைப் புலிகள் 14 பேரை விடுதலை செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.