உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்
காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், புலனாய்வுத் துறையைச் சேர்ந்த சிலர் கமராவுடன் வருகை தந்து அவர்களை புகைப்படம் எடுத்துள்ளதோடு, அச்சுறுத்தலும் விடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமென்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தடைசெய்து குறித்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து, காணாமல் போனோரின் உறவினர்கள் வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் நேற்று (திங்கட்கிழமை) முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் கையில் கமராவுடன் சென்று அம் மக்களையும், அவர்கள் கூறும் கருத்துக்களையும் ஒளிப்பதிவு செய்தும், புகைப்படம் எடுத்தும் வருகின்றனர். அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பல வருட காலமாய் தமது உறவுகளுக்காக காத்திருந்து தீர்வு கிடைக்காத நிலையில், ஜனநாயக ரீதியில் தாம் நடத்தும் போராட்டத்தில் புலனாய்வாளர்கள் இவ்வாறு இடையூறு ஏற்படுத்துவது மேலும் வேதனையை தருவதாக காணாமல் போனோரின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளதோடு, ஊடகவியலாளர்களும் விசனம் வெளியிட்டுள்ளனர்.