இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் – அமெரிக்கத் தூதுவர்
அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க கடற்படையின், யுஎஸ்எஸ் ஹொப்பர், ஏவுகணை நாசகாரி கப்பல், நேற்று கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
யுஎஸ்எஸ் ஹொப்பர்,கொழும்பில் தரித்து நின்ற போது, அமெரிக்க கடற்படையினர் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பல்வேறு விளையாட்டு, கலாசார நிகழ்வுகளில் பங்கேற்றதுடன், கடலில் மீட்பு மற்றும் கப்பல் சோதனைகளை மேற்கொள்வது தொடர்பான தந்திரோபாய பயிற்சிகளையும் சிறிலங்கா கடற்படையினருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.