விடைபெறுகிறார் நிஷா
அமெரிக்காவில் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலராகப் பதவி வகித்த நிஷா பிஸ்வால், இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து விடைபெறவுள்ளார்.
வரும் 20ஆம் நாள், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதும், அமெரிக்க இராஜாங்கச் செயலராக ரெக்ஸ் ரில்லர்சன் பதவியேற்கவுள்ளார். அத்துடன், இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிய பதவிகளிலும் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.
இதற்கமைய, கடந்த மூன்றரை ஆண்டுகளாக தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றிய, நிஷா பிஸ்வாலுக்குப் பதிலாக புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
ஒபாமா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நிஷா பிஸ்வாலுக்கு இராஜாங்கத் திணைக்களத்தில் பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் வொசிங்டனில் இடம்பெற்றிருந்தது.
இதில் சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசமும் பங்கேற்றிருந்தார்.
தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றிய நிஷா பிஸ்வால், சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், ஆறுதடவைகள் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் உள்ளிட்ட முக்கியமான காலகட்டத்தில் இவர், சிறிலங்கா விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.