நெடுங்கேணி பிரதேச செயலக ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில்
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரை, பொதுமகன் ஒருவர் தாக்கியதை கண்டித்து பிரதேச செயலகத்தை மூடி ஊழியர்கள் அனைவரும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரச ஊழியர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை புளியங்குளம் பொலிசார் கைது செய்த போதிலும், மறுநாளே அவரை விடுவித்தமையால் பொலிசாரின் செயற்பாட்டை கண்டித்து இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரதேச செயலகத்தில் கடைமையாற்றும் அரச உத்தியோகத்தரை தனக்கு வீட்டு திட்டம் தரவில்லை என கூறி ஒருவர் தாக்கியுள்ளார்.
இது தொடர்பில் புளியங்குளம் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதனை தொடர்ந்து அன்றைய தினம் மாலையே தாக்குதலை மேற்கொண்ட புளியங்குளத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
எனினும் மறுநாள் அவரை பொலிசார் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர். அரச உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் தொடர்பில் குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்காமலும், நீதிமன்றில் முற்படுத்தாமலும் பொலிஸ் பிணையில் விடுவித்தமை தொடர்பில் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபை ஊழியர்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் மேற்கொண்ட நபர் அரசியல் கட்சி ஒன்றின் செல்வாக்கு மிக்கவர் என்பதனாலேயே பொலிசார் இவ்வாறு பாராமுகமாக நடந்து கொண்டதாக பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.