பொருத்து வீடுகளைப் பார்வையிட அமைச்சர்கள் இருவர் யாழ் விஜயம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பினையும் மீறி வடக்கில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி பொருத்து வீட்டுத் திட்டத்தினை பார்ப்பதற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக யாழ். உரும்பிராய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொருத்து வீடுகளை பார்ப்பதற்காக அமைச்சர்கள் இருவரும் நேற்றைய தினம் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர்.
விசேட ஹெலிகொப்டர் மூலம் யாழ். நகர் பாஷையூர் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்த அமைச்சர்கள் அங்கிருந்து உரும்பிராய் சென்று மாதிரி பொருத்து வீடுகளைப் பார்வையிட்டதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடிய அமைச்சர்கள் ஒருசில மணிநேரத்திலேயே இருவரும் ஹெலிகொப்டரில் கொழும்புக்குத் திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து வசதிகளையும் கொண்ட பொருத்து வீடுகளைப் பெறுவதற்கு மக்கள் ஆர்வமாக இருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருவதோடு அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போதும் அமைச்சர் சுவாமிநாதனுக்கும், கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் கடும் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையிலேயே நிதி அமைச்சருடன் அவசரமாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து மாதிரி பொருத்து வீடுகளைப் பார்வையிட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.