Breaking News

சம்பந்தனின் கள்ள கையெழுத்து இட்டு சந்திரிக்காவை காப்பாற்றிய நீலன்

முன்னாள் ஜெனாதிபதி சந்திரிக்கா
குமாரதுங்காவை காப்பாற்றுவதற்காக சம்பந்தனது கையொப்பத்தை நீலன்திருச்செல்வம் இட்டு மோசடி செய்த விபரங்கள் வெளியாகியுள்ளது. சம்பந்தன்,ஆனந்தசங்கரி மற்றும் நீலன் திருச்செல்வம் ஆகியோர் எவ்வாறு காப்பாற்றினர் என்பது தொடர்பில் உடகவியலாளர் இரா.துரைரத்தினம் அவர்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தோற்றம் தொடர்பில் எழுதிவரும் தொடரிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

அக்காலப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இரு அணிகளாகவே செயல்பட்டன. ஒரு அணி ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நெருக்கமாக செயற்பட்டது. மற்ற அணி விடுதலைப்புலிகளுடன் நெருக்கமாக செயற்பட்டது.

ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நெருக்கமான அணியில் ஆனந்தசங்கரி, சம்பந்தன், நீலன் திருச்செல்வம் ஆகியோர் இருந்தனர். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அணியில் ஜோசப் பரராசசிங்கம், மாவை சேனாதிராசா, போன்றவர்கள் இருந்தனர்.✨

ஜனாதிபதி சந்திரிக்கா தமிழர்களுக்கு உரிமையை வழங்கி பிரச்சினையை தீர்த்து வைப்பார் என சம்பந்தன் அணியினர் கூறிவந்தனர். சந்திரிக்கா அம்மையானர் ஒரு பொதியை வைத்திருக்கிறார். அதன் மூலம் தீர்வு நிட்சயம் கிடைக்கும் என சம்பந்தன், ஆனந்தசங்கரி, நீலன் தரப்பினர் நம்பினர். சந்திரிக்காவின் பொதியை தயாரித்தவர் நீலன் திருச்செல்வம் தான் என அக்காலப்பகுதியில் பேச்சு அடிப்பட்டது.

💥🌟சந்திரிக்காவுக்கு நெருக்கமாக செயற்பட்ட அணி சந்திரிக்காவுக்காக கள்ள கையெழுத்து இட்டு அறிக்கை வெளியிட்ட சம்பவம் இந்த இரு அணிகளுக்கிடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது. கள்ள கையெழுத்து விவகாரம் தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுச்சபை கூட்டத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

சமாதானபுறா வேசம் போட்டு தமிழர்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா ஜனாதிபதியாகிய கையோடு தன்னுடைய சுயரூபத்தை காட்டத்தொடங்கினார் யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த 1999 ஆம் ஆண்டு காலப்பகுதி.

கொழும்பில் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கொழும்பின் பாதுகாப்பு நிலைமைகள் பற்றியும் ஆராயப்பட்ட போது விடுதலைப்புலிகள் கொழும்பை தாக்கும் திட்டம் இருப்பதாக தகவல் கூறப்பட்டது.

புலிகள் கொழும்பை தாக்கினால் தமிழர்களை நானே தலைமை தாங்கி தாக்குவேன் என கொழும்பில் பிரமுகர்களுடனான சந்திப்பின் போது சந்திரிக்கா எச்சரித்தார்.
சண்டேலீடர் பத்திரிகையில் குமார் பொன்னம்பலம் இதை ஆதாரத்துடன் வெளியிட்டார்.

நாட்டின் ஜனாதிபதி அந்த நாட்டில் இருக்கும் இன்னொரு இனத்தை நானே தலைமை தாங்கி கொலை செய்வேன் என கூறுவது எவ்வளவு பாரதூரமான விடயம். வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், இராஜதந்திரிகள் மட்டத்திலும் இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன.

சந்திரிக்காவின் இப்பேச்சு தமிழர்கள் மட்டத்திலும் பெரும் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குமார் பொன்னம்பலம் சிங்கள, ஆங்கில ஊடகங்களில் ஜனாதிபதி சந்திரிக்காவை மிகக்கடுமையாக சாடிவந்தார். அந்த வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

தமிழர்களை கொல்வேன் என சந்திரிக்கா அம்மையார் சொல்லவில்லை என்றும் அவர் தமிழர்களை நியாயமாக நடத்தும் ஒரு தலைவர் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை சகல ஊடகங்களுக்கும் அனுப்பபட்டிருந்தது.

நானே தலைமை தாங்கி தமிழர்களை கொல்வேன் என சந்திரிக்கா கூறினாரா இல்லையா என தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எப்படி தெரியும்? தமிழர் விடுதலைக்கூட்டணி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை,

அப்படியானால் ஏன் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை விட்டது? தமிழர் விடுதலைக்கூட்டணி ஏன் இதில் மூக்கை நுழைத்து கொண்டது?

சந்திரிக்காவுக்கு மிக நெருக்கமானவர்கள் என கருதப்படும் சிலர் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்றிலேயே நானே தலைமை தாங்கி தமிழர்களை தாக்குவேன் என சந்திரிக்கா கூறியதாக சண்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் தமிழர்கள் என்று சொல்லப்போனால் இலங்கை வங்கியின் தலைவராக இருந்த ராஜன் மட்டுமே அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

சந்திக்கா பேசிய விடயம் எப்படி வெளியில் போனது? தமிழர் என்ற காரணத்தால் ராஜன் மீது சந்திரிக்காவுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து இலங்கை வங்கி தலைவர் பதவியிலிருந்து ராஜன் தூக்கி எறியப்பட்டார்.

இந்த விடயத்தை ராஜன் தனக்கு சொல்லவில்லை என்றும் வேறு ஒருவர் மூலமே ஆதாரத்துடன் பெற்றதாக குமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

💥🌟சந்திரிக்காவை காப்பாற்றும் வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியிட்ட அறிக்கை கூட கள்ள கையொப்பம் இட்டு மோசடியான முறையிலேயே வெளியிடப்பட்டிருந்தது.
நானே தலைமை தாங்கி தமிழர்களை தாக்குவேன் என தான் கூறியது எப்படியோ அம்பலமாகிவிட்டது. என்ன செய்யலாம் என யோசித்தார் சந்திரிக்கா, தனது ஆலோசகரான நீலன் திருச்செல்வத்தை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தார் சந்திரிக்கா, அங்கு சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வம் தாங்கள் அறிக்கை ஒன்றை வெளியிடுவதாக உறுதியளித்து விட்டு வந்தார்.💥🌟

அக்காலப்பகுதியில் சம்பந்தன், ஆனந்தசங்கரி, நீலன் திருச்செல்வம் ஆகிய மூவர் மட்டுமே அனைத்து முடிவுகளையும் எடுத்து வந்தனர்.

அந்த நேரத்தில் ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவராக இருந்தார். தலைவர் சிவசிதம்பரம் சுகயீனமுற்றிருந்தால் தலைவருக்குரிய பணிகளை ஆனந்தசங்கரியே செய்து வந்தார். அப்போது கட்சியின் செயலாளராக இருந்த சம்பந்தன் கொழும்பில் இருக்கவில்லை. கட்சியின் செயலாளரே அனைத்து அறிக்கைகளிலும் கையொப்பம் இடவேண்டும்.

💥🌟சந்திரிக்கா அம்மையாரின் களங்கத்தை போக்க நீலன் திருச்செல்வம் அறிக்கையை தயாரித்தார். அறிக்கையின் கீழ் செயலாளர் நாயகம் ஆர்.சம்பந்தன் என சம்பந்தனின் கையொப்பமும் இடப்பட்டது. சம்பந்தன் என கள்ள கையொப்பத்தை வைத்தவர் கலாநிதி நீலன் திருச்செல்வம் தான்.💥🌟

நீலன் திருச்செல்வத்தின் அலுவலகத்திலிருந்தே சகல பத்திரிகைகளுக்கும் தொலைநகல் மூலம் அறிக்கை அனுப்பட்டது. சண்டேலீடர் பத்திரிகைக்கும் ஒரு பிரதி அனுப்பட்டது. சண்டேலீடர் அலுவலகத்தில் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்காவும் குமார் பொன்னம்பலமும் பேசிக்கொண்டிருந்த போதே தொலைநகல் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அறிக்கை அங்கு வந்து சேர்ந்தது. அந்த அறிக்கையை லசந்த விக்கிரசிங்க குமார் பொன்னம்பலத்திடம் காட்டினார்.

குமார் பொன்னம்பலம் நெருங்கிய நண்பர் என்பதால் மட்டுமல்ல நானே தலைமை தாங்கி தமிழர்களை கொல்வேன் என்ற சந்திரிக்காவின் சர்ச்சைக்குரிய விடயத்தை சண்டே லீடரில் எழுதிவருபவர் என்ற ரீதியிலும் லசந்த அந்த அறிக்கையை குமாரிடம் காட்டினார்.

அறிக்கையை பார்த்தவுடன் குமார் உடனடியாக சொன்னார். இதில் பெரிய மோசடி இருக்கிறது. இது சம்பந்தனின் கையொப்பம் இல்லை. நீலன் தான் ஆர்.சம்பந்தன் என்று கையொப்பம் வைத்திருக்கிறார் என்றார் குமார் பொன்னம்பலம்.

சண்டே லீடர் பத்திரிகையில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் அறிக்கை வெளியிடப்பட்டதுடன் இந்த கையெழுத்து மோசடி பற்றியும் குமார் பொன்னம்பலம் விலாவாரியாக எழுதினார்.
ஒருவரின் கையெழுத்தை இன்னொருவர் வைப்பது கிரிமினல் குற்றம் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

சம்பந்தனின் உண்மையான கையொப்பம், நீலன் திருச்செல்வம் இட்ட கையெழுத்து எப்படி இந்த கள்ள கையொப்பத்திற்கு பொருந்துகிறது என்பதை படங்களுடனும் ஆதாரங்களுடனும் சண்டே லீடர் வெளியிட்டது.

அக்காலப்பகுதியில் நான் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த விடிவானம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தேன். சில வருடங்களுக்கு முதல் விடிவானம் பத்திரிகை உரிமையாளர் மனோ இராசசிங்கம் குமார் பொன்னம்பலத்துடன் தொலைபேசியில் அறிமுகம் செய்து வைத்தார். மனோ இராசசிங்கத்தின் மனைவி சாந்தி சச்சிதானந்தம் ஒருநாள் என்னை கொழும்பில் வைத்து குமார் பொன்னம்பலத்திற்கு நேரில் அறிமுகப்படுத்தி வைத்தார். சாந்தி குமார் பொன்னம்பலத்தின் உறவினரும் கூட.

1991ஆம் ஆண்டு யூன் 12ஆம் திகதி இடம்பெற்ற கொக்கட்டிச்சோலை படுகொலை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை மட்டக்களப்பில் நடைபெற்ற போது பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக குமார் பொன்னம்பலம் சமூகமளித்தார். மட்டக்களப்பில் ஜோசப் பரராசசிங்கம் அவர்களுடனேயே தங்கியிருந்தார். அப்போது குமார் பொன்னம்பலத்தை நேரில் சந்தித்த போதிலும் நெருக்கமான தொடர்பு கிடையாது.

விடிவானம் பத்திரிகை ஆசிரியராக இருந்த காலத்திலேயே குமார் பொன்னம்பலத்துடன் அடிக்கடி தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.

மட்டக்களப்பில் நடைபெறும் கடத்தல்கள், கைதுகள், கொலைகள் பற்றிய விபரங்களை பெறுவதற்காக என்னுடன் குமார் பொன்னம்பலம் அடிக்கடி தொடர்பு கொள்வார். அந்த தொடர்பினால் விடிவானம் பத்திரிகைக்கும் தான் வெளியிடும் அறிக்கைகள் கட்டுரைகளை குமார் அனுப்புவார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கள்ள கையொப்ப அறிக்கை விவகாரத்தையும் குமார் பொன்னம்பலம் சகல ஆதாரங்களுடன் அனுப்பியிருந்தார். அதனை விடிவானம் பத்திரிகையில் பிரசுரித்தோம்.

💥🌟கள்ள கையெழுத்து விவகாரம் அம்பலமானதை அடுத்து சம்பந்தன் ஒரு அறிக்கை வெளியிட்டார். நான் சொல்லித்தான் நீலன் திருச்செல்வம் என்னுடைய கையெழுத்தை வைத்தார் என்று. சட்டம் தெரிந்தவர்கள், மெத்தபடித்தவர்களின் இந்த முட்டாள் தனங்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என மௌனமாக இருந்தனர் தமிழ் மக்கள்.💥🌟

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில உறுப்பினர்கள் மத்தியில் நீலன் திருச்செல்வம், சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்றவர்களின் நடவடிக்கைகள், சர்வாதிகாரப்போக்குகள், தன்னிச்சையான முடிவுகள் பற்றி கடும் அதிருப்தியும் ஆட்சேபனையும் எழுந்தன.

அடுத்த வாரம் கொழும்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை காரியாலயத்தில் நிறைவேற்றுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பட்டது. காரசாரமான விவாதங்கள் நடந்தன.

சந்திரிக்காவுக்காக வக்காலத்து வாங்கியது தேவையற்ற செயல். தமிழர் விடுதலைக் கூட்டணி அதனை செய்திருக்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் உட்பட சிலர் கூறினர். சந்திரிக்கா அப்படி கூறினாரா இல்லையா என ஆரூடம் கூறுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு என்ன தேவை இருக்கிறது என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

நீலன், சம்பந்தன், ஆனந்தசங்கரி மீது கண்டனங்கள் எழுந்தன. கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டது. அன்று மாலை நீலன், சம்பந்தன், ஆனந்தசங்கரி ஆகியோர் ஜனாதிபதி சந்திரிக்காவை சந்தித்தனர். நீண்டநேரம் பேசினர். என்ன பேசினர் என்பது யாருக்கும் தெரியாது.

மகிந்த ராசபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது கட்சிக்கு தெரியாமல் தனியாக சம்பந்தன் சந்தித்து வந்தார். அது போல சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சம்பந்தன், ஆனந்தசங்கரி, நீலன் திருச்செல்வம் ஆகியோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏனைய உறுப்பினர்களுக்கு தெரியாமல் சந்திப்பது வழமை.

🌟தங்களுக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து என ஜனாதிபதி சந்திரிக்காவிடம் சம்பந்தன், ஆனந்தசங்கரி, நீலன் திருச்செல்வம் ஆகியோர் முறைப்பாடு செய்ததை அடுத்து மூவருக்கும் குண்டு துளைக்காத கார்கள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் வழங்கப்பட்டது.

ஆனந்தசங்கரி, சம்பந்தன் ஆகியோருக்கு கொழும்பில் பாதுகாப்புடன் கூடிய வீடுகளும் ஜனாதிபதி சந்திரிக்காவினால் வழங்கப்பட்டது. அந்த வீடுகளிலேயே சம்பந்தன், ஆனந்தசங்கரி ஆகியோர் இப்போதும் இருப்பதாக கூறப்படுகிறது.🌟

இச்சம்பவம் நடைபெற்று சிறிது காலத்தில் 29.07.1999 அன்று கொழும்பில் விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதலில் நீலன் திருச்செல்வம் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பது பற்றிய பேச்சுக்கள் ஜோசப் பரராசசிங்கம், மாவை சேனாதிராசா ஆகியோருடனேயே நடந்தப்பட்டதாகவும் அவர் தனது தொடர் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சந்திரிக்காவை காப்பாற்ற நீலன் சம்பந்தரது கையெழுத்தை இட்டதுபோல இன்று மைத்திரி ரணிலை காப்பாற்ற யார் யாரெல்லாம் கள்ள கையெழுத்து இடப்போகின்றார்களோ என்ற ஐயம்தான் எழுகின்றது.


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்