ஈழத்திற்கான அனைத்து அம்சங்களும் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கம்!
தமிழீழத்துக்கான அனைத்து அம்சங்களும் அடங்கிய புதிய அரசியலமைப்பை எதிர்ப்போம் என அறைகூவல் விடுக்கும் பொதுபலசேனா அமைப்பு, இந்தியாவின் தேவைக்காக பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படவுள்ளது என்றும் குற்றம் சாட்டியது.
கொழும்பு, கிருலப்பனை பொதுபலசேனா தலைமையலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
தேரர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
இன்றைய அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பில் தனித் தமிழீழத்துக்கான அனைத்து அம்சங்களும் அடங்கியிருக்கின்றன. எனவே இதனை முழுமையாக எதிர்க்கின்றோம். புதிய அரசியலமைப்பிற்கு நாட்டுக்குள் இடமில்லை. அது வந்தால் நாடு பிரியும்.
புதிய அரசியலமைப்பு வித்தையைக் காட்டி அரசாங்கம் நாட்டிலுள்ள அரச வளங்கள் அனைத்தையும் விற்பனை செய்யும் போக்கில் ஈடுபட்டுள்ளது. அதற்காகவும் அதனை மறைப்பதற்காகவும் அரசியலமைப்பை காட்டுகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதனை அண்டிய 15000 ஏக்கர் காணியையும் சீனாவுக்கு விற்பனை செய்யவுள்ளது.
கொழும்பு துறைமுகத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யவுள்ளது. அதேவேளை இந்தியாவின் தேவையை நிறைவேற்றுவதற்காக பலாலி விமானத்தளத்தை சர்வதேச விமானத் தளமாக மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அமெரிக்காவின் யுத்தக் கப்பலொன்று திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது. இவ்வாறு முழு நாட்டையும் வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கவும் அரச வளங்களை விற்றுத் தீர்க்கவும் அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது.
இதனை மூடிமறைப்பதற்காக அரசியலமைப்பைக் காட்டி நாட்டு மக்களை திசை திருப்பி ஏமாற்றுகின்றது. எனவே அரசின் புதிய அரசியலமைப்புக்கு எதிராக இன, மத வேறுபாடுகளை மறந்து நாமனைவரும் ஒன்றுபட வேண்டும்.
அரசியலமைப்பு ஏற்பட்டால் அது நாட்டைப் பிரிக்கும். எனவே பொதுபலசேனா இதனை முழுமையாக எதிர்க்கிறது. இந்த தேசத்தை நேசிக்கும் தேசப்பற்றுள்ளவர்கள்அனைவரும் அரசியலமைப்பை எதிர்க்க வேண்டும். இதற்காக பொதுபலசேனா எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக அடக்குமுறை முன்னெடுக்கப்படுகிறது. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகிறார்கள். கடற்படைத் தளபதி சண்டியரைப் போல் செயற்படுகிறார்.
கடந்த ஆட்சியில் இவ்வாறு நடந்திருந்தால் உடனடியாக பாதுகாப்பு செயலாளர் மீது ஊடகங்கள் குற்றம் சுமத்தியிருக்கும். ஆனால் இன்று ஊடகங்கள் அமைதி காக்கின்றன என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் பொதுபல சேனாவின் நிர்வாக இயக்குநர் கலாநிதி டிலாந்த விதானகேயும் கலந்து கொண்டார்.