தமிழ் ஊடகங்களை புறக்கணிக்கும் நீதியமைச்சர்
நீதி மற்றும் புத்ததாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தமிழ் ஊடகங்களை புறக்கணித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தின் தமிழ் கிராமங்களை அண்டியதாக அமைந்துள்ள மடுகந்தை, கொக்கெலிய ஆகிய இரு கிராமங்களுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அமைச்சர், அங்குள்ள பௌத்த பிக்குகளையும், மக்களையும் சந்தித்திருந்தார். அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகத் திட்டத்தையும் அப்பகுதிகளில் ஆரம்பித்து வைத்தார்.
அமைச்சரின் இந்நிகழ்வுகளுக்கு சகோதார மொழி ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் தமிழ் மொழி ஊடகவியலாளருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் இந்தச் செயற்பாடு தொடர்பில் தமிழ் ஊடகவியலாளர்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் பங்கேற்ற பின்னர் சிங்கள ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பௌத்த மதத்திற்கு நாட்டில் வழங்க வேண்டிய இடத்தை அப்படியே முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், பௌத்த மதத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தை அரசாங்கம் இல்லாமல் செய்யாது என்றும் பரவி வரும் பிரசாரங்களில் உண்மையில்லை எனவும் தெரிவிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.