யாழ். பொது நூலக எரிப்புக்கு மன்னிப்புக் கோரினார் பிரதமர்
ஐதேக ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்காக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் பொதுமன்னிப்புக் கோரினார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடந்து வரும் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே, ஐதேக ஆட்சியில் இருந்த வேளை, 1981ஆம் ஆண்டு யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.
நேற்று சிறிலங்கா பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, கூட்டு எதிரணியினர் குழப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரசிங்க, ‘நாங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கிறோம். புதிய தொழில்களை உருவாக்குகிறோம்.
அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறைவடையும் போது, வடக்கில் பெருமளவு அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்திருப்போம்.
எமது அரசாங்கம் பதவியில் இருந்த போது, யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டது. அதற்காக நாங்கள் வருந்துகிறோம். அதற்காக மன்னிப்புக் கோருகிறோம்.
நீங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கோருவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?’ என்றும் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.