கற்குளம் கிராமத்தில் 215 குடும்பங்களில் 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக நோய்!
வவுனியா வடக்கின் எல்லைக் கிராமங்களின் நிலக்கீழ் நீர் விரைவாக கல்சிய அதிகரிப்புக்குள்ளாகி வருகின்றது. இதனால் போரில் அழிந்தது போக மிகுதியாக ஊர் திரும்பியவர்களை சிறுநீரக நோய் அரிக்கின்றது.
உதாரணத்திற்கு வவுனியா வடக்கில் இருக்கும் கற்குளம் கிராமத்தை எடுத்துக்கொள்வோம்.
நெடுங்கேணி பிரதேச சபைக்கு கீழ் உள்ள கிராமங்களில் கற்குளம் கிராமமும் ஒன்றாகும். தனி கிராம சேவகர் பிரிவாக இருக்கும் கற்குளத்தில் 215 குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயமும் மந்தை வளர்ப்பும் இக்கிராமத்தவரின் வாழ்வாதாரத் தொழிலாகக் காணப்படுகின்றது.
போர் காலத்தில் கற்குளம் புலிகளின் பின்னரங்க நிலைகளுக்கு அண்மையாகக் காணப்பட்டதால் அதிகளவான மக்கள் இங்கு வாழவில்லை. இராணுவத்தின் எறிகணை மற்றும் ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல்கள் காரணமாக மக்கள் உள்நுழைய அஞ்சும் கிராமமாக இருந்தது. இப்போது 215 குடும்பங்கள் வரையில் மீள்குடியேறியிருக்கின்றனர்.
இவ்வாறு கிட்டத்தட்ட 30 வருடங்களின் பின்னர் மக்கள் கற்குளத்தில் மீள்குடியேறினாலும் தற்போது மக்கள் வாழ அஞ்சும் சூழல் மீளவும் உருவாகியுள்ளது.
குடிதண்ணீரில் பிரச்சினை. இங்குள்ள கிணறுகளின் தண்ணீரில் கல்சியத்தின் செறிவு அதிகரித்து காணப்படுவதால் தற்போது வரை 50க்கும் மேற்ப்பட்டவர்கள் சிறுநீரக நோய்த்தாக்கங்களுக்கு உள்ளாகியிருப்பதோடு 15 பேர் வரையிலானவர்கள் கல்லடசல் நோய்த்தாக்கத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.
இந்த மக்களின் நன்மை கருதி குடி தண்ணீரை சுத்தப்படுத்திக் கொடுக்கும் இயந்திரம் நெடுங்கேணி பிரதேச சபையால் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதனை இயக்குவதற்கான வசதி செய்துகொடுக்கப்படவில்லை. நீரை சுத்தப்படுத்தும் இயந்திரத்தை இயக்குவதற்கான மேலதிக வேலைகளை செய்வதற்கும், நீர், குழாய் வசதிகளை செய்வதற்கும் பிரதேச சபையால் ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை. இந்தப் பணிகளைப் பூர்த்தி செய்து மக்களுக்கு சுத்தமான நீரை வழங்குவதற்கு ஒரு லட்சம் அளவில் பணம் தேவை என கிராமத்தவர்களும், தொழிலுட்ப உத்தியோகத்தரும் தெரிவித்தனர்.
யாராவது முன்வந்து இவ்வுதவியினை செய்து கொடுத்தால் கற்குளத்தில் 215 குடும்பங்கள், அதற்கு அண்மைய கிராமங்களான பட்டிக்குடியிருப்பில் 115 குடும்பங்கள், மருதோடையில் 68 குடும்பங்கள், ஊஞ்சால்கட்டியில் 40 குடும்பங்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவர்.