Breaking News

ஈழ மக்களுக்காக குரல் கொடுத்த தமிழக முதல்வருக்கு சுரேஷ் இரங்கல்



ஈழ மக்கள் அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்று மனதார விரும்பிய தமிழக முதல்வர் மறைவு பெரும் துயர் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் சுரேஷ். க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

‘தமிழக மக்களால் அம்மா என்று அன்பாக அழைக்கப்பட்ட தமிழக முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழககத்தின் பொதுச்செயலாளருமான மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி கேட்டதும் செய்வதறியாது திகைத்து நின்றோம்.

அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் அவர் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம். அவற்றை தனித்து நின்று சமாளித்த அவரது நெஞ்சுரம் எம்மைப் பிரமிக்க வைக்கிறது.

கட்சியையும் ஆட்சியையும் அவரது ஆளுமைமிக்க தலைமையினால் திறம்பட நடத்திச் சென்றார். தமிழகத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டதுடன் ஏழை எளிய மக்களின் நலனுக்காக பல நலத்திட்டங்களையும் அறிமுகப்படுத்தியிருந்தார்.

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே என்றும், தனி ஈழமே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும், இறுதிப் போரின்போது நடைபெற்ற சம்பவங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானங்களை நிறைவேற்றியதை ஈழத் தமிழ் மக்களாகிய நாம் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

ஈழ மக்கள் அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்று அவர் மனதார விரும்பினார். அதற்காக அரும்பாடுபட்டு உழைத்தார். தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு பிரஜாவுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வந்தார்.

அவர்களது பிள்ளைகளான எமது மாணவர்கள் அங்கு கல்வி கற்பதற்கு தொடர்ந்தும் அனுமதி அளித்ததுடன் இந்திய தமிழ் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து நலத்திட்டங்களையும் ஈழத்து மக்களுக்கும் வழங்குமாறு பணித்தார்.

மாண்புமிகு முதல்வரின் பிரிவு அனைத்து இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் தமிழகத்து உறவுகளுடன் ஈழத் தமிழ் மக்களாகிய நாமும் எமது துயரங்களைப் பகிர்ந்துகொள்கிறோம்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் ஈழத் தமிழ் மக்களும் அன்னாரின் மறைவிற்கு எமது இதயபூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.