வடமாகாண எதிர்கட்சி தலைவராக, தவராசாவே நீடிப்பார், அவைத்தலைவர் அறிவிப்பு
வடமாகண சபையின் எதிர்கட்சித் தலைவராக சி.தவராசாவே நீடிப்பார் என வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அறிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 67 ஆவது அமர்வு இன்று மாகாண சபையின் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போது ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர வடமாகாண சபையின் எதிர்கட்சி தலைவரை மாற்றி உறுப்பினர் தவநாதனை நியமிக்குமாறும் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா தமக்கு உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவு உள்ளதாக தமக்கு கடிதம் எழுதியிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஏனைய மாகாண சபைகளின் முன்னுதாரணங்களை கொண்டு கடந்த முதலாம் திகதி எதிர்கட்சி உறுப்பினர்கள் 8 பேரையும் அழைத்து கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
அதன்போது ஒரு உறுப்பினர் தவநாதன் தனது கருத்தை வழங்க கால அவகாசம் கேட்டிருந்தார்.
இதனால் 8 எதிர்கட்சி உறுப்பினர்களில் 7 உறுப்பினர்கள் சி.தவராசாவிற்கு ஆதரவாகவும் ஒரு உறுப்பினர் நடுநிலையாகவும் காணப்பட்டமையினால் வடமாகாண சபையின் எதிர்கட்சி தலைவராக சி.தவராசாவே தொடர்ந்தும் நீடிப்பார் என அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.